🌹 வசிஷ்டரின் கன்றான நந்தினியை அஷ்ட வசுக்கள் திருடியதால் அவர்களை பூமியில் பிறக்குமாறு சபிக்கிறார் வசிஷ்டர்
🌹 இதில் தன் மனைவியின் வற்புறுத்தலால் இந்த திருட்டிற்கு தலைமை தாங்கிய தியா எனும் வசுவே பீஷ்மராக அவதரித்தார் மற்ற வசுக்கள் துணை நின்றனர் இதனால் அவர்கள் ஏழு பேரும் பிறந்தவுடன் மரணிப்பர் என்றும் பீஷ்மனே பல காலம் வாழ்வான் என்றும் சாபம் அளித்தார்
🌸 இந்த சாபத்தினால் சந்தனுவிற்கும் கங்கைக்கும் அஷ்ட வசுக்கள் மகனாக அவதரித்தனர் சாபத்தின் காரணமாக ஏழு பேரை பிறந்தவுடன் கொல்கிறார் கங்கா தேவி ஆனால் எட்டாவது குழந்தையை கொல்ல செல்கையில் தன் அளித்த வாக்கை மீறி கங்கையை தடுக்கிறார் சந்தனு
🌼 இதனால் உண்மையை கூறும் கங்கா தேவி தன் மகன் தேவவிரதனை வளர்த்து சந்தனுவிடம் அளிப்பதாக வாக்களித்து தன் மகனை அழைத்து கொண்டு செல்கிறார்
🌼 இவ்வாறு செல்லும் பீஷ்மர்
---- வேதங்களையும் வேதாங்கங்களையும் வசிஷ்டரிடமும்
---- அனைத்து சாஸ்திரங்களையும் சுக்ராச்சாரியரிடம்
---- அரசனுக்குரிய கடமைகள் மற்றும் தர்மங்களை பிரகஸ்பதியிடமும்
---- சஸ்திரங்கள் மற்றும் அஸ்திரங்களை பரசுராமரிடமும் சிஷ்யனாகி கற்றார்
(பிற்காலத்தில் சியவனரிடம் வேதாங்கங்களையும்
சனத்குமாரரிடம் ஆத்மவித்தையையும்
மார்க்கண்டேயரிடம் ஸந்யாச தர்மத்தையும்
இந்திரனிடம் மேலும் அஸ்திரங்களையும் கற்றார்)
🌸 ஒரு நாள் வேட்டைக்கு செல்லும் சந்தனு கங்கையின் பிரவாகத்தை அம்புகளை கொண்டு தடுக்கும் இளைஞனின் தீரத்தை கண்டு வியக்கிறார் பின்தோன்றும் கங்காதேவி தான் அளித்த வாக்கின்படி தேவவிரதனை ஒப்புவிக்கிறார்
🌸 தன் மகனை வாரியணைத்த சந்தனு தேவவிரதனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து மகிழ்கிறார் இந்நிலையில் மீனவ பெண்ணான சத்தியவதி மீது காதல் கொள்கிறார் சந்தனு
🌹 ஆனால் சத்தியவதியின் வளர்ப்பு தந்தையான செம்படவனோ " தன் மகளை சந்தனுக்கு அளித்தாலும் தேவரதனே அரசனாவான் என் மகளின் சந்நதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும் ஒரு வேளை தேவரதன் அரச பதவியை விட்டுகொடுத்தாலும் அவனது சந்ததியினர் பின்னாளில் ஆட்சியை கைப்பற்றுவர் " என கூறி மறுக்கிறார்
🌺 இதனை கேள்வியுற்ற பீஷ்மர் "தான் இனி அரசனாக இல்லை அஸ்தினாபுர அரியணையின் சேவகனாக இருப்பேன் என்றும் இனி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பேன்" என்றும் சபதம் எடுக்கிறார்
🌸 உண்மையில் பீஷ்மர் செய்த சபதம் எந்த ஒருவராலும் இதுவரை செய்யப்படாதது தந்தையின் காதலுக்காக தனக்கு விவாகம் வேண்டாமென்றும் இனி சேவகனாய் இருப்பேன் என்றும் சபதம் செய்வது பீஷ்மரின் விரதத்தை எடுத்துரைக்கிறது இதனால் தேவவிரதனான இவர் பீஷ்மர் இனிவரும் காலங்களில் பீஷ்மர் என்றழைக்கப்பட்டார்
🌺 இதனை கண்ட சந்தனு தன் மகனின் தியாகத்தை மெச்சி "விருப்ப மரணம்" என்ற வரத்தை அளிக்கிறார் (எப்போது மரணிக்க வேண்டும் என நினைக்கிறாறோ அப்போதே மரணம் நிகழும்)
🌺 பின் சத்தியவதியை சந்தனு மணமுடிக்கிறார் அவர்களுக்கு இரு மகன்கள் பிறக்கின்றனர் மூத்தவனான சித்ராங்கதன் அதே பெயருடைய கந்தர்வனால் கொல்லப்பட இளையவனான விசித்திர வீரியனுக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் நடக்கிறது
🌺 விசித்திர வீரியனுக்கு மணமுடிக்க நேரம் வந்துவிட்டதாக அறியும் தாய் சத்தியவதி பீஷ்மரை காசி தேசத்தில் நடக்கும் சுயம்வரத்தில் காசி அரசனின் மகள்கள் மூவரையும் கவர்ந்துவர ஆணை பிறப்பிக்கிறார்
🌺 அவ்வாறே செல்லும் பீஷ்மர் முத்தேவியரையும் கவர்கிறார் இதனால் அங்கு இருந்த அரசர்களுக்கும் பீஷ்மருக்கும் யுத்தம் வருகிறது கங்கை மைந்தன் ஒரே தேரில் அனைத்து அரசர்களையும் வீழ்த்துகிறார்
🌺 முத்தேவியரில் மூத்தவளான அம்பை சால்வனை விரும்பியதாக கூற அவ்வாறே அவளை விடுவிக்கிறார் ஆனால் சால்வனோ அம்பையை ஏற்க மறுக்கிறார் இதனால் அம்பை தன் வாழ்வு நாசமானதற்கு காரணம் பீஷ்மரே என முடிவுக்கு வருகிறார்
🌺 இதனால் கடும்தவம் செய்து முருகப்பெருமானை மகிழ்விக்கும் அம்பை தேவலோகத்தின் வாடாத மலர்மலையை வரமாக பெறுகிறார் அம்மாலை அணிபவர் பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவர்
🌺 ஐந்து வருடகாலம் பல தேசம் சென்றும் பீஷ்மரின் மேல் கொண்ட பயத்தினால் எவரும் அந்த மாலையை ஏற்க மறுக்கின்றனர் இதனால் அந்த மாலையை துருபதனின் அரண்மனை வாயிலில் மாட்டிவிட்டு தவம்புரிய செல்கிறார்
🌺அப்போது தனது தாயின் தந்தையும் பரசுராமரின் நண்பரான ஹோத்திரவாகனரை சந்திக்கிறார் தாத்தாவின் அறிவுரைப்படி பரசுராமரிடம் சரண்புகுகிறார் இதனால் பரசுராமருக்கும் பீஷ்மருக்கும் குருசேத்திரத்தில் யுத்தம் மூள்கிறது
🌼 23 நாட்கள் நடக்கும் யுத்தத்தில் பீஷ்மர் அவர் வசுவாக இருந்தபோது தெரிந்த பிரஸ்வாப்ன அஸ்திரத்தை விட முயல்கிறார் அந்த அஸ்திரத்தை தடுக்க அஸ்திரம் இல்லை இதை ஏவினால் எதிரி தூங்கிவிடுவார்
🌺 ஆனால் குருவை அவமதிக்கும் செயலை செய்யாதே பீஷ்மா என நாரதர் கூற அந்த அஸ்திரத்தை திரும்ப அழைக்கிறார் இதை கண்ட பரசுராமர் தன் தோல்வியை ஒப்புகொள்கிறார்
(பீஷ்ம பரசுராமர் யுத்தம் பற்றியும் அம்பையின் மறுபிறப்பு பற்றியும் தெளிவாக அறிய
http://seetharaman007.blogspot.in/2017/05/blog-post_28.html?m=1 )
🌺 பிறகு பிறக்கும் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரருக்கு குருவாகி அவர்கள் வளரும் வரை ஆட்சியை கவனித்து கொள்கிறார் அவர்களை தனது மகன்களை போல வளர்க்கிறார் பிறகு மூவருக்கும் மணமுடிக்கிறார்
🌺 பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பிறந்து வளர்ந்தவுடன் அவர்களை சரத்வானின் மகனும் தனது சகோதரனுமாக வளர்த்த கிருபரிடம் கல்விகற்க வைக்கிறார்
🌼 கிருபரின் தந்தையான சரத்வானர் வில்வித்தையில் சிறந்த முனிவர் தவம்செய்யும் போதுகூட வில் இல்லாமல் இருக்கமாட்டார் இந்திரனையே வில்வித்தையில் வென்றவர் இவரின் மகனானதாலும் வில்லிற்கே பிறந்ததாலும் சஸ்திரங்களில் கிருபரை வெல்வோர் இல்லை
🍀 இதனால் குரு வம்சத்தின் இளவரசர்கள் சஸ்திரங்களில் தேர்ந்தவர்களாகின்றனர் இதை அறியும் பீஷ்மர் அவர்கள் அஸ்திரங்களிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என விரும்புகிறார்
🌼 இந்நேரத்தில் தான் துரோணரை இளவரசர்கள் சந்திக்கின்றன சஸ்திரங்களில் கிருபர் போல அஸ்திரங்களில் சிறந்தவர் துரோணர் இதனால் அவரை குருவாக்குகிறார்
🌼 குரு இராஜ்யத்தை அரியணைக்காக இரண்டாக பிரிப்பதை பீஷ்மர் சிறிதும் விரும்பவில்லை முன்னோர்களின் புகழை சிதைக்கும் செயலாக கருதினார் ஆனால் விதுரர் இயலாமையை உணர்த்த வேறு வழியில்லால் ஆமோதிக்கிறார்
🌺 இராஜசூய யாகத்தில் பீஷ்மரும் துரோணருமே எது எது நடந்தது மற்றும் நடக்க வேண்டும் என கண்காணித்து யாகம் சிறப்பாக நடக்க யுதிஷ்டிரனால் வேண்டப்பட்டவர்கள்
🌺 இராஜசூய யாகத்தில் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் யாரை தலைமையாக கொள்ள வேண்டும் என வினவ அவர் கிருஷ்ணனை தலைமையேற்க அறிவுறுத்துகிறார்
🌼 கிருஷ்ணனை சிசுபாலன் அவமதிப்பதையும் கிருஷ்ணன் தகுதியற்றவன் என்பதை கூறியபோதும் கிருஷ்ணனால் வீழ்த்தப்படாதவன் யாரும் இல்லை எனக்கூறி கிருஷ்ணனின் பெருமைகளை கூறுகிறார்
🌹 பாண்டவர்களின் அஞ்ஞான வாசத்தின் போது கூட பீஷ்மர் யுதிஷ்டிரன் இருக்கும் இடம் பெறும் வளம் மற்றும் வளர்ச்சியை தெளிவாக கூறுகிறார் அதை வைத்தே எளிதாக கண்டுபிடிக்கின்றனர்
🍀 அர்ஜுனன் விராடயுத்தத்தில் வெளிப்பட்ட பின் அஞ்ஞாத வாசம் முடிந்ததா இல்லையா என துரோணர் கேட்க பீஷ்மரே காலத்தை சரியாக சொல்லி அஞ்ஞாதவாசம் முடிந்தது என உரைக்கிறார்
🍁 அதேபோல் அர்ஜுனன் சம்மோகன அஸ்திரத்தை விட்ட போது பீஷ்மர் மட்டும் அதற்கு மயங்கவில்லை காரணம் அவருக்கு மட்டுமே அதற்கான எதிர்வினை தெரியும்
🌺 இதற்காக உத்தரனை பீஷ்மரை கடக்கும்போது மட்டும் இடப்புறமாக கடந்துசெல் என அறிவுறுத்துகிறான் (காரணம் அவ்வாறு கடப்பது பராமரிப்பாளர் மற்றும் நட்பானவர்களே இதனால் உத்திரனை பீஷ்மர் தாக்கவில்லை)
🌹 அனைவரும் மயங்கியபின்னும் பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தம் தொடர்கிறது பிறகே அனைவரும் விழிக்கின்றனர் பிறகு விராடத்தின் பசுக்களை ஒப்படைக்குமாறு துரியனுக்கு அறிவுறுத்துகிறார்
🍁 பீஷ்மரின் வார்த்தைகளை துரியன் சற்றும் ஏற்கவில்லை பீஷ்மருக்கு யுத்தத்தில் சற்றும் விருப்பம் இல்லை ஆனால் அரியணைக்கு சேவகனாக இருப்பேன் என்ற சபதத்தால் வேறு வழியின்றி கௌரவர்கள் பக்கம் நிற்கிறார்
🌹 சேனையில் ஒவ்வொரு முக்கிய வீரரை பற்றியும் துரியன் அறிய விரும்பியதால் அனைவரையும் மகாரதி, அதிரதி மற்றும் ரதி என வீரத்திற்கு ஏற்ப வகைப்படுத்தி விளக்குகிறார்
🌺 இந்த நேரத்தில் கர்ணனை அர்த்த-ரதி (அதாவது 3000 பேரை ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறன்கொண்டவர்) என்றுகூற கோபம்கொள்ளும் கர்ணன் பீஷ்மர் களத்தில் இருக்கும்வரை நான் யுத்தகளம் புகமாட்டேன் என சபதம் செய்கிறார்
🌺 போரின் முதல்நாளே யுதிஷ்டிரன் அர்ஜுனனிடம் " பிதாமகர் பீஷ்மர் எத்தரப்பிற்காக யுத்தம் செய்கிறாரோ அத்தரப்பை எதிர்த்து நம்மால் எவ்வாறு யுத்தம்செய்வோம் " என வினவ அர்ஜுனன் இறைவனே நம்பக்கம் என சமாதான படுத்துகிறார்
🌺 போரின் தொடக்கத்தில் யுதிஷ்டிரன் ஆயுதங்களை கீழே எறிந்துவிட்டு பீஷ்மத்துரோணர்களிடத்தில் ஆசியை பெறச்செல்கிறான் இதனால் அப்போது பீஷ்மர் என்ன வரம் வேண்டும் எனகேட்க தம்மை வீழ்த்தும் வழி யாதென வேண்ட பீஷ்மர் அதற்கான நேரம் வரவில்லை என்றும் அந்த நேரம் வரும்போது தானே அந்த உபாயத்தை அளிப்பதாகவும் வரமளிக்கிறார்
🌺 யுத்தகளத்தில் பீஷ்மர் இருந்தவரை தர்மயுத்தம் தர்மம் மாறாமல் நடந்தது அதாவது தர்மம் சரியாக கடைபிடிக்கப்பட்டது மேலும் அர்ஜுனனுக்கு பீஷ்மரை தடுப்பதற்கே நேரம் சரியாக இருந்தது எந்த ஒரு பெரிய அழிவையும் ஏற்படுத்த முடியவில்லை
🌸 ஒவ்வொரு முறையும் பீஷ்மரும் அர்ஜுனனும் மோதும்போதும் அதை காண தேவர்கள் மேலே கூடினார்கள் அந்த யுத்தம் மிகவும் பயங்கரமாக இருந்தது காரணம் போரிட்ட இருவருமே தேவர்களின் சேனையையும் வெல்ல கூடியவர்கள்
🌼 இருவருக்குமே ஒருவரை ஒருவர் வீழ்த்தும் எண்ணம் இல்லை
ஒவ்வொரு முறையும் அர்ஜுனனை பீஷ்மர் துரியனின் சொல்லாலும்
பீஷ்மரை அர்ஜுனன் கிருஷ்ணரின் சொல்லாலுமே எதிர்த்தனர்
🌹 போரின் மூன்றாம் நாள் அர்ஜுனன் பீஷ்மரை சரியாக எதிர்க்கவில்லை என கையில் சக்கரத்தை ஏந்தி பீஷ்மரை வதைக்க செல்கிறார் இதை கண்ட பீஷ்மர் கிருஷ்ணனை வரவேற்று தனக்கு முக்தியளிக்க வேண்டுகிறார் ஆனால் அர்ஜுனன் ஆயுதமேந்த மாட்டேன் என்றுரைத்த வாக்கை தாம் மீறலாகாது என சமாதானம் கூறி தடுக்கிறார்
🌹 தேவர்களையும் அசுரர்களையும் ஒரே பகலில் அழிக்கும் திறன்கொண்ட பீஷ்மர் மேலும் பலர் தனது படையில் இருந்தும் பாண்டவர்களை ஏன் கொல்ல முடியவில்லை என பீஷ்மரிடம் வினவ பீஷ்மர் " கிருஷ்ணன் காப்பவர்களை கொல்லக்கூடியவன் எக்காலத்திலும் இல்லை " என உரைத்து நர-நாராயணர்களை பற்றி கூறுகிறார்
🍁 போரின் எட்டாவது நாளில் அர்ஜுனனின் மகன் அரவான் அலம்புசனால் கொல்லப்பட வெகுண்டெழுந்த அர்ஜுனன் கௌரவ படையை நாசம் செய்கிறான் மேலும் துரோணர் பார்த்துகொண்டிருக்கும்போதே துரியனின் தம்பிகளை பீமன் கொல்கிறான் இதனால் பெரும் வேதனையடையும் துரியன் பீஷ்மரிடம் தம்மால் நான் ஒருபலனையும் காணவில்லை எனவே தாம் கர்ணனை ஆயுதமேந்த அனுமதியளிக்க வேண்டும் என கூற பீஷ்மர் வெகுண்டெழுகிறார்
🌿 இதனால் போரின் ஒன்பதாம் நாள் இரக்கமற்றவராக காட்சியளிக்கிறார் அவரின் பிரவாகத்தை தடுக்க தவறுகிறான் தனஞ்செயன் இதனால் வாசுதேவர் தானே கொல்வதாக சக்கரம் ஏந்தி செல்கிறார் ஆனால் விஜயன் மீண்டும் தடுக்கிறான்
🍃 கோபம்கொண்ட யமன், பாசத்தை தரித்த வருணன், வஜ்ரத்தையுடைய இந்திரன் இவர்களை கூட யுத்தத்தில் வீழ்த்தலாம் ஆனால் பீஷ்மரை வீழ்த்தமுடியாது என்றுரைக்கிறான் யுதிஷ்டிரன் இதனால் பீஷ்மர் யுத்தகளத்தில் இருக்கும் வரை வெற்றியில்லை என பாண்டவர்கள் இரவில் பீஷ்மரை தனியாக கூடாரத்தில் சந்திக்கின்றனர் அவர்களை அன்புடன் வரவேற்ற பீஷ்மர் " பௌத்திரர்களே சந்தேகமடைய வேண்டாம் இது அன்பாக இருக்கும் நேரம் யுத்தகளம் இல்லை "என கூற யுதிஷ்டிரன் பீஷ்மர் அளித்த வரத்தின்படி அவரை வீழ்த்தும் வழியை கேட்கிறார்
🌹 அப்போது பீஷ்மர் நான் கையில் ஆயுதமேந்தி இருக்கையில் தேவபடையினாலும் வீழ்த்த இயலாதவன் ஆனால் ஆயுதங்களை கீழே வைத்தபோது வீழ்த்துவது இயலும்
👑 அப்போது பீஷ்மர் முன்காலத்தில் செய்த சபதத்தை எடுத்துரைக்கிறார்
- ஆயுதத்தை கீழே வைத்தவன்
- கவசத்தையும் கொடியையும் இழந்தவன்
- பயந்தவன் மற்றும் ஓடுகிறவன்
- பெண்ணால் ஜெயிக்கப்பட்டவன் மற்றும் பெண்ணின் பெயரில் உள்ளவன்
- ஏகப்புத்திரனுள்ளவன் மற்றும் சந்ததியுண்டு பண்ணாதவன்
- நபும்ஸகன் (பெண்ணாய் இருந்து ஆணாய் மாறியவன்) மற்றும் மாவீரன் என்று போற்றப்படாதவன்
🌺 இவர்கள் எவரின் முன்னும் நான் ஆயுதத்தை ஏந்த மாட்டேன் இது நான் முன்னமே செய்த சபதமாகும்
🌻 உங்களின் சேனையில் உள்ள சிகண்டி நபும்ஸகன் ஆவான் நர-நாராயணர்களான கிருஷ்ணார்ஜுனர்களை தவிர என்னை கொல்லக்கூடிய ஒருவனை பார்க்கவில்லை ஆதலால் அவனை முன் நிறுத்தி அர்ஜுனன் அம்புகளை தொடுக்கட்டும் என பாண்டவர்களை அறிவுறுத்துகிறார்
🌼 அடுத்த நாள் யுத்தம் தொடர்கிறது பாண்டவ சேனை பீஷ்மரை இன்றைய தினம் வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு களமிறங்குகின்றன சாத்யகி, துருபதன், விராடன், அபிமன்யு, உப பாண்டவர்கள் என அனைவரின் கவனமும் கங்கைமைந்தன் மீது திரும்புகிறது
💐 நாள்தோறும் 16,000 மகாபலசாலிகளை வீழ்த்துகிறார் பத்தாம் நாளில் சிகண்டி பீஷ்மரை நோக்கி வருவதற்குள் 7 மகாரதிகளையும், 5000 ரதிகளையும், 16000 வீரர்களையும் கொல்கிறார் சிகண்டி அங்கு வந்தபின் தான் அனைவரும் கவனமும் பீஷ்மர்மீது வருகிறது அதன்பிறகு கொன்றவர்களின் எண்ணிக்கை எண்ணற்றது
🌸 பீஷ்மரை காக்க துச்சாதனனை நியமிக்கிறான் துரியன் ஆனால் அவனை விரட்டுகிறான் தனஞ்செயன் தனஞ்செயன் ஒருபுறமிருக்க மற்ற அனைவரும் பீஷ்மருடன் யுத்தம்புரிகின்றன
🌼 அத்தனை பேர் எதிர்த்தும் பீஷ்மர் யுத்தகளத்தில் நடனம் ஆடுவதுபோல அனைவரையும் சமாளித்தார் அப்போது வந்த சிகண்டி பீஷ்மரை கடுமையாக தாக்குகிறார் ஆனால் பீஷ்மரோ சிகண்டியை துளியும் தாக்கவில்லை
🌻 இந்தநேரத்தில் யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் "அப்பா நான் இந்த தேகத்தில் வெறுப்படைந்துவிட்டேன் யுத்தத்தில் எண்ணிலடங்காத உயிர்களை சாய்த்துவிட்டேன், நீ எனக்கு பிரியத்தை செய்ய விரும்பினால் உடனடியாக அர்ஜுனனை என்னை வீழ்த்த வேண்டும் " என கூறுகிறார்
🌼 வாசுதேவரின் ரதம் பீஷ்மரின் சொல்படி வருகிறது சிகண்டியை பீஷ்மருக்கு முன்நிறுத்தியதால் பீஷ்மர் வில்லை கீழே வைக்கிறார் சிகண்டியின் பல அம்புகள் தாக்கியும் பீஷ்மருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை
🌸 பிறகு வருகிறான் தனஞ்செயன் சிகண்டியை முன்நிறுத்தி பீஷ்மர் வில்லை எடுக்க பாணம் கொண்டு அறுக்கிறான் விஜயன் இவ்வாறாக பல விற்களை பீஷ்மர் எடுக்க எடுக்க அறுக்கிறான்
🌸 இதைகண்ட கௌரவ படையில் துரோணர், கிருபர் முதலிய 7 பேர் படையுடன் அர்ஜுனனை கொல்ல விரைகின்றனர் ஆனால் அதேசமயம் பாண்டவ படையின் பீமன், அபிமன்யு, கடோற்கசன் உள்ளிட்டோர் அவர்களை தடுக்க அர்ஜுனன் பீஷ்மரிடம் தொடர்ந்து யுத்தம்புரிகிறான்
🌺 பீஷ்மரின் விற்களனைத்தும் அறுக்கப்பட்டவுடன் மலையையும் பிளக்கும் ஈட்டியை பிரயோகிக்கிறார் ஆனால் ஈட்டியை உடைக்கிறான் அர்ஜுனன் பிறகு கத்தி மற்றும் கேடயத்துடன் தேரில் இருந்து இறங்குவதற்குள் அதையும் உடைக்கிறான் அர்ஜுனன்
🌺 பிறகு பீஷ்மர் " இந்த வாசுதேவர் மட்டும் இல்லையென்றால் இந்த பாண்டவர்களை ஒரே வில்லில் சாய்த்து இருப்பேன் ஆனால் இவர்களின் கொல்லப்படாத்தன்மையும் சிகண்டியின் பெண்தன்மை ஆகியவற்றால் நான் அவர்களுடன் போரிட மாட்டேன் " என்று கோபத்தில் உரைக்கிறார்
🌸 அப்போது தனக்கான காலம் வந்துவிட்டதை உணர்கிறார் அப்போது சப்தரிஷிகள், வசுக்கள் மற்றும் தேவகணங்கள் அதை ஆமோதித்து இதே சரியான காலம் என உரைக்க பீஷ்மர் மீது மலர்மாரி பொழிந்தது இதை பீஷ்மர் மற்றும் சஞ்சயன் தவிர வேறெவரும் அறியவில்லை
🍁 இதனால் அதற்குப்பிறகு பீஷ்மர் ஆயுதத்தை எடுக்கவில்லை இதை பயன்படுத்திய அர்ஜுனன் பீஷ்மரின் மேல் அம்புமழை பொழிகிறான் (இவ்வாறு தாக்கியதற்காக அர்ஜுனனுக்கு வசுக்கள் சாபமளிக்கின்றனர் இதனால் பிற்காலத்தில் தன்மகனான பாப்ருவாகனனின் அம்பால் வீழ்கிறான் பிறகு உலூபியால் காப்பாற்றப்படுகிறான்)
🌼 அர்ஜுனனின் அம்புகளால் தாக்கப்பட்டு பீஷ்மர் தேரிலிருந்து விழுகிறார் அர்ஜுனனின் நூற்றுக்கணக்கான அம்புகளால் பீஷ்மரின் உடல் கீழேபடவில்லை இதைகண்ட தேவர்களின் மனமே களங்கியது எனில் குரு வம்சத்தினரின் நிலையை சொல்லவா வேண்டும்
🌼 வெற்றி பேரிகைகள் மற்றும் ஆராவாரம் செய்ய வேண்டாமென யுதிஷ்டிரன் ஆணையிடுகிறான் மேலும் அனைவரும் போரை நிறுத்திவிட்டு பீஷ்மரிடம் செல்கின்றன
🌼 தன் தலைமட்டும் தொங்குவதாய் கூற அர்ஜுனனை சத்திரியனுக்கு தலையணை அமை என்றுகூற அவ்வாறே அம்புகளை கொண்டு அமைக்கிறான் மேலும் தாகத்திற்கு அஸ்திரம் கொண்டு கங்கையை கொண்டு வருகிறான் அப்போதுகூட சமாதானம் செய்வதே சரியென கூற துரியன் அப்போதும் மறுக்கிறான்
🌼 தனது தந்தையிடம் பெற்ற வரத்தால் அப்போதும் அவர் உயிர் பிரியவில்லை ஆனால் பீஷ்மர் உத்தராயண காலத்தில் (திருத்தப்பட்டது) பிரியும் உயிர்களுக்கு முக்தி ஆதலால் தான் அதுவரை இப்படியே இருக்கபோவதாய் உரைக்கிறார்
🌼 பீஷ்மர் வீழ்ந்த இடம் தனிமைபடுத்தப்பட்டு இருசேனைகளும் காவல் காக்கின்றனர் பீஷ்மருக்காக ஆடல் பாடல் இன்னிசை நிகழ்த்த மேலும் அவரை இன்புற செய்ய பலர் வருகின்றனர் ஆனால் வேதம் சொல்லும் அந்தணர்களை தவிர மற்றோரை வேண்டாமென மறுக்கிறார்
🌼 அனைவரும் சென்றபின் இரவில் கர்ணன் பீஷ்மரை சந்திக்க வருகிறான் பீஷ்மரை சரணங்களைப்பற்றி " யான் ராதேயன், குற்றமற்றவனாயினும் தம்மால் பார்க்கப்படும்போதெல்லாம் மிகவும் வெறுக்கப்படுபவன் " என்றுகூற கண்திறந்த பீஷ்மர் ரட்சகர்களை வெளியேற சொல்லி கர்ணனை தன்மகன்போல ஒரு கையால் அணைக்கிறார்
🌺 நீ என்னை வெறுத்தாலும் பரவாயில்லை கர்ணா நான் நீ துரியனிடம் சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்ககூடாது என எண்ணினான் நீ குந்தியின் புத்திரன் என முன்னமே நான் அறிவேன் உன் வீரத்தை பற்றியும் அறிவேன் ஆனால் நீ உன் தம்பிகளுடனேயே யுத்தம் செய்ய வேண்டாம் என்றே அன்று அவ்வாறு உரைத்தேன் இப்போதும் நீ பாண்டவர்களுடன் சேரலாம் என உரைக்கிறார்
🌸 ஆனால் அதை மறுக்கும் கர்ணன் யுத்தத்திற்கான அனுமதியை வேண்டுகிறான் அவ்வாறே நீண்ட புகழோடு இருப்பாய் என ஆசிர்வசித்து அனுப்புகிறார்
🌼 போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர் ஆனால் யுதிஷ்டிரனின் குற்றவுணர்வால் அரியணை ஏறாமல் தவிக்கிறான்
இராஜ்யமும் தர்மமும் ஒன்றோடொன்று வீரோதம் என்பது அவன் கருத்து இழைத்த பாவத்திற்கு பதிலாக வனவாசம் சென்று பிச்சையெடுத்து உண்டுவாழ்வேன் என கூறுகிறான்
🌺 வியாசர், நாரதர், கிருஷ்ணன், விதுரர், திருதராஷ்டிரன் என பலரும் கூறியும் யுதிஷ்டிரனின் மனம் சாந்தியடையவில்லை இதனால் வியாசர் பீஷ்மரிடம் கருத்துகேட்பதே யுதிஷ்டிரனுக்கு மாற்றத்தை தரும் என்கிறார்
👑 பின்பு ஓரு நாள் கிருஷ்ணரை சந்திக்க யுதிஷ்டிரன் செல்கையில் கிருஷ்ணர் தியானத்தில் இருக்கிறார் இதை கண்ட யுதிஷ்டிரருக்கு ஆச்சார்யம் நாராயணரான கிருஷ்ணரே தியானத்திலிருக்குகிறார் என்று
🌼 இதை அறிந்த கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் " பீஷ்மர் என்னைநோக்கி தவம்புரிகிறார் ஆதலால் என்மனம் அங்கே செல்கிறது பீஷ்மர் மரணித்துவிட்டால் உலகிலுள்ள அனைத்து கல்விகளும் குறைவடையும் எனவே உடனடியாக அவரிடம் இருந்து ஞானத்தை பெற்றுகொள் " எனக்கூற அடுத்தநாள் அனைவரும் பீஷ்மரை நோக்கி செல்கின்றனர்
🌺 அனைவரையும் இன்புற்று வரவேற்கிறார் பீஷ்மர். கிருஷ்ணர் யுதிஷ்டிரனின் நிலையை கூறி ஞானோபதேசம் வழங்க வேண்டுகிறார் தனக்கு அதற்கான சக்தியில்லை எனக்கூற கிருஷ்ணன் அதற்கான சக்தியை அளிக்கிறார்
👑 பீஷ்மர் ஞானோபதேசம் வழங்கும்போது அவரை சுற்றி இருந்தவர்களில் முக்கியமானவர்கள்
- கிருஷ்ணன்
- பரசுராமர்
- மார்க்கண்டேயர்
- சப்தரிஷிகள்
- வியாசர்
- வால்மீகி
- திருணபந்து (ஹனுமானுக்கு சக்தி மறந்துபோகும் சாபமளித்தவர்)
- வசிஷ்டர்
- விஸ்வாமித்ரர்
- பராசரர்
- தக்க்ஷர்
- மைத்ரேயர்
- பிரகஸ்பதி
- சுக்ராச்சாரியார்
- சியவனர்
- சனத்குமாரர்
- கசியபர்
- கபிலர்
- வாயு
- காலவமுனிவர்
- மாண்டவ்யர்
- லோசமர்
- மௌத்கல்யர்
🌺 பீஷ்மரின் ஞானோபதேசம் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது ஒவ்வொரு காலையும் அனைவரும் வந்து இரவு வரை கேட்பர் ஞானோபதேசம் முடிந்த பின் தட்சியாயண காலத்தில் ஒரு சுபதினத்தை குறிக்கிறார் பீஷ்மர் அந்நாளில் யுதிஷ்டிரனை அக்னி எடுத்துவர ஆணையிடுகிறார்
🌼 சரியாக அம்புபடுக்கையில் படுத்தநாளிலிருந்து 58 நாட்கள் களித்து பீஷ்மர் குறித்த தினம் வந்தது அவ்வாறே யுதிஷ்டிரன் அக்னி கொண்டுவந்து சேர்ந்தான்
🌺 பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு நல்லாசிகளை வழங்கி திருதராஷ்டிரரிடம் பாண்டவர்கள் உன்பிள்ளைகளே அவர்களை நன்றாக பார்த்துகொள்ள அறிவுறுத்தி வாசுதேவரிடம் யுத்தத்தில் துரியனால் நானும் கலந்துகொண்டேன் என்றும் ஆதலால் மன்னிப்பும் வேண்டுகிறார்
👑 பீஷ்மரிடம் கிருஷ்ணர் " தாம் தந்தையை மதித்து இரண்டாம் மார்க்கண்டேயர் போல தவவாழ்வு வாழ்ந்துவந்தீர்கள் அதனால் தான் இன்றும் எமன் தம்முன் கைகட்டி நிற்கிறார் தாம் வசுக்களையடைவீர் " என்று சொல்ல பீஷ்மர் எழுந்துநிற்கிறார்
👑 அவர் நின்றவுடனே அவர் உடம்பில் தைத்து இருந்த அம்புகள் மாயமாய் மறைந்தன இது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது பிறகு அவர் தலையிலிருந்து புறப்பட்ட ஜோதி விண்னை அடைந்து மறைகிறது
👑 பிறகு விதுரர் மற்றும் யுயுத்சு சந்தன கட்டைகளை அடுக்கினர்
திருதராஷ்டிரன் மற்றும் யுதிஷ்டிரர் பீஷ்மரின் உடலை மலராலும் பட்டாலும் மூடினர்
யுயுத்சு உயர்ந்த குடை பிடித்தான்
பீமனும் அர்ஜுனனும் வெண்சாமரம் வீசினர்
நகுலசகாதேவர்கள் கீரிடம் வைத்தனர்
பித்ருமேதமெனும் சாஸ்திரத்தை முறையாக செய்து சந்தனத்தாலும் வாசனைதிரவியங்களாலும் மஞ்சளாலும் பீஷ்மரை மூடி தீ மூட்டி அனைவரும் வலம் வந்து வணங்கினர் பிறகு யுதிஷ்டிரன் அரியணை ஏறி ஆட்சிபுரிந்தான்
👑 இன்றும் கடுமையான விரதத்திற்கு பீஷ்மரே அடையாளமாக இருக்கிறார்
🌺 பீஷ்மர் விண்ணுலகம் சென்ற தினம் இன்றும் பீஷ்ம அஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது (அடுத்த வருடம் ஜனவரி 25)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🌸 பீஷ்மரின் திறன் அளவிடமுடியாதது எனினும் அவர் ஏற்ற சபதத்திற்குள்ளேயே அவரை நிறுத்திகொண்டார்
🌼 கடைசிவரை அரசனின் ஆணையை அவ்வாறே ஏற்றார் அரசனுக்கு தகுந்த முடிவையையும் ஞானத்தையும் எடுத்துரைக்க வில்லை
🌸 இதை யுத்தகளத்தில் சக்கரமேந்தி செல்கையில் கிருஷ்ணரே கூறுகிறார் அமைச்சனின் கடமை அரசனை சரியான பாதையில் செலுத்துவதே என கூறுகிறார்
🌼 கிருஷ்ணனே அரசன் இல்லை அமைச்சர் மட்டுமே துவாரகையின் அரியணையை கம்சனின் மரணத்திற்குபிறகு கம்சனின் தந்தை உக்ரசேனரே மதுராவிற்கு அரசராகிறார் அவரே கடைசிவரை அரசராக இருக்கிறார்
🌼 உக்ரசேனரின் சபையில் கிருஷ்ணனின் தந்தையான வசுதேவர் மற்றும் அவரின் மகன்களான பலராமர் மற்றும் கிருஷ்ணர் அமைச்சராக இருந்தனர் ஆனால் சேனைக்கு பொறுப்பேற்றவர்கள் பலராமரும் கிருஷ்ணருமே
🌸 கிருஷ்ணன் ஒவ்வொரு முறையும் தன்பணியை சரியாக செய்தான்
🌹 மேலும் சத்திரியர்களின் தர்மம் அகிலத்தில் தர்மத்தை ஸ்தாபிப்பதே இதையே கிருஷ்ணர் அர்ஜுனனிடம் உரைக்கிறார் போருக்குபின் அசுவமேதயாகம் பாண்டவர்கள் நடத்த வைத்ததற்கு காரணம் அதுவே போருக்குப்பின் இருந்த அவலநிலையை பயன்படுத்தி வரும் அரசுகள் அதர்மபோக்கில் செல்லும் அவைகளை கட்டுபடுத்தி தர்மபாதையில் செலுத்துவது மிகவும் அவசியமாகும் ஆழ்ந்துப்பார்த்தால் ஒருவனை தேவர்களும் இராஜசூய யாகம் மற்றும் அசுவமேதயாகம் செய்ய சொல்வதன் காரணம் இதுவே
🌼 பீஷ்மர் இருந்தபோது இருந்த அரசவம்சங்களின் நிலை அவல நிலையாகும் தர்மம் ஒடிந்த நிலையில் இருந்தது இதற்காகவே பாரதப்போர் நடத்தப்பட்டது போரில் அரசவம்சங்கள் பலிகொடுக்கப்பட்டன
🌸 பாண்டவர்களாலேயே இராஜசூய யாகம் நடத்த முடிந்ததென்றால் காசி நகரில் தனியாளாக ஒரே தேரில் (பீஷ்மர் தனியே ஒரே ரதத்திலேயே சென்றார்) அனைத்து அரசர்களையும் வென்ற பீஷ்மரால் அனைத்து அரசர்களையும் வென்று தர்மத்தின் ஒரே கொடையில் கொண்டு வந்து இருக்கலாம் ஆனால் பீஷ்மர் அஸ்திணாபுர அரியணையை காப்பது மட்டுமே தர்மமாய் ஆற்றினார்
🌻 ஆனால் கிருஷ்ணனின் செயல்மாறாக இருந்தது பாணாசுர யுத்தத்தில் சிவபெருமானிலிருந்து
( http://seetharaman007.blogspot.in/2017/06/100.html?m=1 )
🌻 தெற்கே கபாடபுரத்தை ஆண்ட பாண்டியன் வரை
( http://seetharaman007.blogspot.in/2017/05/blog-post_14.html?m=1 )
🌹 கிருஷ்ணன் தர்மம் காக்க செய்த போர்கள் ஏராளம் அதில் ஒன்றே பாரதயுத்தம்
🌼 பீஷ்மர் தனது சபதத்தையே கண்ணும் கருத்துமாக பார்த்தார் சூதாட்டமண்டபத்திலும் பாண்டவர்களுக்கு இராஜ்யத்தை தருமிடத்துலும் யுத்தத்திற்கான முடிவிலும் பீஷ்மரின் முடிவு வேறாகி இருந்தால் நிலை தலைகீழாகி இருக்கும்
🌼 தர்மம் எதுவென்று அறிந்திருந்தும் தனக்கு தானே இட்டு இருந்த எல்லையை அவர் மீறவில்லை இரட்டை மனம் கொண்டு இருந்தார் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் ஆனால் போரிட்டதோ கௌரவர்பக்கம்
🌹 கிருஷ்ணர் தான் அளித்த வாக்கை அகில நலனுக்காக மீற சிறிதும் தயங்கவில்லை நடக்கும் தர்மயுத்தத்தில் பாண்டவர் வெல்வது அவசியமென எண்ணினார்
ஆயுதமேந்தமாட்டேன் என்ற வாக்கை மீறி சுதர்சனத்தை கையில் ஏந்தினார் மேலும் வாசுதேவரின் ரதம் எப்போதும் பாசறையில் இருந்தது யுத்தத்தில் அர்ஜுனன் ஒருவேளை மரணித்தான் என்றால் அவரே யுத்தத்தை ஏற்று நடத்துவதே திட்டம் ஆயுதமேந்ந்மாட்டேன் என்ற சபதத்தை மீற வாசுதேவன் தயங்கவில்லை
( http://seetharaman007.blogspot.in/2017/06/blog-post.html?m=1 )
🌸 கிருஷ்ணர் தூது சென்றபோதே விதுரர் பீஷ்மர் முதலியோர் இருப்பதால் துரியன் நிச்சயம் சமாதான பேச்சுவார்த்தைக்கு வரமாட்டான் அதனால் தாம் செல்வது உசிதமல்ல என விளக்குகிறார்
🌹 கிருஷ்ணரின் தூதின்போது கூட பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் இவர்கள் எல்லாம் என்பக்கம் இருக்கும்போது பாண்டவர்களால் என்ன செய்துவிட முடியும் ஊசிமுனை நிலம்கூட தரமாட்டேன் என்றே துரியன் உரைக்கிறான் பீஷ்மரின் சபதம் துரியனுக்கு கவசம் ஆகிறது
🌹 கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம் ஆனால் பீஷ்மரோ வசுவின் அவதாரம் ஆதலால் இருவரையும் ஒப்பிடுவது சரியாகாது எனினும் சில கருத்துகளை இங்கு புரிய வைக்கவே இதைசெய்ய வேண்டியதாயிற்று
👑 மகாபாரதம் தேவர்களோடு சேர்ந்து மகாவிஷ்ணு நடத்திய நாடகமே அனைத்தும் சரியாக திட்டமிட்டபடியே நடந்தது இதை சொர்க்கம் சென்றபின்னே தான் யுதிஷ்டிரரே அறிவார்
👑 ஆதலால் ஒவ்வொரு விசயமும் நமக்கு ஞானத்தை அளிக்கவே நடந்தது அழிவுதான் வழியென்றால் கிருஷ்ணன் பிரளயத்தை உண்டாக்கி இருக்கலாம் அவதாரம் எடுத்து இவ்வளவு காரியம் செய்யவேண்டிய அவசியம் இல்லை
👑 பீஷ்மரிடம் இருந்து தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விசயம்
👑 ஒருவன் பின்பற்றும் தர்மமே அகிலத்திற்கு கேடு விளைவிக்குமேயானால் அது அதர்மமாகிறது
ஆனால் ஒருவனின் தர்மத்தை மீறிய செயல் அகிலத்திற்கே நன்மையை தருமானால் அது தர்மமாக போற்றப்படுகிறது
~~ -க்கு அடுத்து உள்ள தகவல்கள் என் தனிப்பட்ட கருத்தே
👑 முழுமையாக படித்ததற்கு நன்றி