Thursday, June 7, 2018

ஈசனின் தத்துப்பிள்ளை உபமன்யு மஹரிஷி



ஓடி விளையாடும் வயதில் கால்கள் இமயமலை நோக்கி தவம் செய்ய அழைத்து சென்றது அந்த சிறுவனை

சிறுவன் தன்மீது விளையாட இடம் தேடி குடும்பத்தில் இருந்து பிரிந்து பாதை மறந்து திரிகிறானோ என பூமா தேவியை நினைக்க வைத்து

இந்த இளம்பிஞ்சு வெப்பம் தாளாமல் இமயமலை செல்கிறான் போல என அக்னி தேவனை இரங்க வைத்து

இவன் பெற்றோர்களை தேடி இவனை சமர்பிக்க வேண்டும் என வாயுதேவனை மனதில் மும்மூர்த்திகளை ஆராதிக்க வைத்து

பால்மணம் மாறாதவன் பனிமலை நோக்கி பயணித்தான்

சிவனருள் போன ஜென்மத்தில் பெறவில்லையென்பதால் பால் கூட கிட்டாது என அவன் தாய் சொன்னது அவன் மனதில் ஆழமாக உரைத்தது

யார் அந்த சிவன் என கேட்க மகாதேவனை பற்றி அன்னை உரைத்தது அவன் மனதில் முக்கண்ணன் மேல் பக்தி வளர காரணமானது

பால் வேண்டும் என அரற்றி அழுத சிறுவன் சிவனை தெரிந்த உடன் இமயமலையில் கொடுந்தவம் செய்வேன் என கிளம்பி கிட்டதட்ட இமயமலை சேர்ந்தான்

பால் என்ன பாற்கடலையே சிவனிடம்  பெற்றுவருவேன் என சொல்லி புறப்பட்டு இருந்தாலும் அவன் மனம் பாலில் இல்லாமல் பவனிடமே இருந்தது

பக்திக்கு பெயர்போன வியாக்கிர பாதரின் மகன் பஞ்சாட்சரத்தில் தன்னை மறந்து தவமிருக்க துவங்கினான்
வருடங்கள் ஓடியது இளம்பிஞ்சின் தவம் இந்திர லோகத்தையே தகித்தது

இதையெல்லாம் அறியாதவரா சூலபாணி சிறுவனை சோதித்து திருவிளையாடல் நடத்த திருவுள்ளம் கொண்டார்

அம்பிகை இந்திராணியாய் மாற

திரிசூலம் வஜ்ரமாகவும்

நந்திகேஸ்வரன் ஐராவதமாகவும்

கணங்கள் தேவர்களாகவும் மாற

புலித்தோல் உடுத்தியவர் திரிலோக அதிபதியான இந்திரனாய் மாறி உபமன்யுவை அடைந்தார்

" மகனே கண்திற திரிலோக அதிபதி இந்திரன் வந்துள்ளேன் சாம்பல் பூசி இருக்கும் ஈசனை எண்ணி ஏன் தவம்செய்கிறாய்

இதோ தேவர்களின் தலைவன் நான் வந்துள்ளேன் என்னால் தர முடியாதது எதுவும் இல்லை என்னை போற்றி வேண்டுவன எல்லாம் பெறுவாய் " என கூற சிறுவன் தீயில் இட்ட புழுவாய் துடித்தான் சிவதரிசனம் பெற்று புழுவாக வாழ்ந்தாலும் வாழ்வேன் இந்திரா ஆனால் சிவநிந்தனை கேட்டு நீ மூவுலகத்தையும் தந்தாலும் அது துச்சமே

இந்திரனை தூற்றிய அவன் சிவநிந்தனை கேட்ட நான் இனி வாழ தகுதியற்றவன் என தபோ பலத்தினால் அக்னியை வளர்த்து சிவனை தவறாக பேசிய நீ வாழக்கூடாது உன்னை அழித்து பின் நான் தீயில் விழுவேன் என கூறி

ரிஷிகளுக்கே உரியதும் ஈசனின் அஸ்திரமுமான அகோராஸ்திரத்தை இந்திரனாய் இருந்த மகாதேவன் மீது விடுத்து தன் முடிவை அக்னியில் தேட தயாரானான்

அவன் வளர்த்த அக்னி சோமநாதனின் குளிர்ந்த பாதையில் அணைய அவன் ஏவிய அகோராஸ்திரம் நந்தி தேவரால் தடுத்து நிறுத்தப்படுகிறது

கண் சிமிட்டும் நேரத்தில் வஜ்ரதாங்கியாய் இருந்த சூலபாணி தன் சுய ரூபம் காட்ட கனவா நிஜமா என புரியாத சிறுவனாய் ஈசன் பாதம் பணிகிறார் உபமன்யு மகரிஷி

நாயன்மார்களில் கூட சிறு தொண்டருக்கு மட்டுமே முருகப்பெருமானுடன் காட்சி தந்த முக்கண்ணன் உபமன்யு ரிஷிக்கு

இடப்புறம் நாராயணர்

வலப்புறம் பிரம்ம தேவன்

முன் தன் இரு பிள்ளைகள் நிற்க

இந்திரன் முதலான தேவர்கள் புடை சூழ

அவ்வளவு ஏன் ஈசனின் பினாக வில், பாசுபத அஸ்திரம், பரசு ராமருக்கு அளித்த பரசு மற்றும் திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்கள் கூட தங்களின் விஸ்வரூபத்துடன் சூழ்ந்து நிற்க

நந்தி வாகனத்தில் பார்வதி தேவியுடன் பதினாறு புஜங்களுடன் காட்சி தந்தார் கல்பாந்த நர்த்தனர்

பாலகனாய் இருந்தாலும் பக்தியில் தன்னை பனிமழையாய் குளிர வைத்தவனை தன் கரங்களில் ஏந்தி அவனது நெற்றியில் முத்தமிட்ட ஹரன் பின்

" குழந்தாய் இனி நீயும் என் மகனே சிருஷ்டிக்கே தாயான உமாதேவி உனக்கு தாய் ஆவார் உனக்கு என்ன வேண்டுமோ கூச்சப்படாமல் கேள் மகனே

ஆயிரமாயிரம் பால், தயிர், நெய் மற்றும் தேனாலான கடல்கள் உன்னை வந்தடையும்

உனது சொந்தபந்தங்களுடன் அமிர்தம் நிறைந்த பாற்கடலை உண்டு காலம் முழுதும் வாழ்வீர்கள் என்னாலும் உன் சந்ததி அழியாமல் தொடரும்

இனி நீ கடவுளுக்கு நிகரானவனாவாய் முக்காலமும் அறிவாய்

மூப்பு, இறப்பு உன்னை சேராது

எனக்கே உள்ள ஞானம், புனிதம் மற்றும் புகழ் கொண்டவனாய் விளங்குவாய் என மேலும் பத்து வரங்களை அளித்த ஈசன்

இரு கரங்களால் இளைய மகனை பார்வதி அன்னையிடம் தேவி இதோ நம் மகன் என அளிக்கிறார் மகாதேவன்

தன் மகனாய் உபமன்யுவை ஏந்திய அன்னபூரணி தன் பங்கிற்கு மேலும் பல வரங்களை அளிக்கிறார்

பின் எப்போதும் உனது ஆஸ்ரமத்தில் நித்யவாசம் செய்வோம் மேலும் நீ நினைக்கும் நேரத்தில் தரிசனம் தருவோம் என கூறி மறைகிறார் மகாதேவர்

இதன்பின் ஆஸ்ரமத்தில் சிவபூஜையில் தன் வாழ்வை கழிக்கிறார் உபமன்யு ரிஷி இதற்கப்பால் ஈசன் உபமன்யு ரிஷியின் பக்தியால் மேலும் ஆயிரம் வரங்களை அளிக்கிறார்

இதன்பின்பு கிருஷ்ண பகவான் தனக்கு சிவபெருமானின் அம்சமாக ஒரு மகன் வேண்டும் என தவம்செய்ய வருகையில் உபமன்யு ரிஷியின் ஆஸ்ரமத்தில் எட்டு தினங்கள் கழிக்கிறார்

பின் உபமன்யு ரிஷி கிருஷ்ண பகவானுக்கு பாசுபத விரதமுறையை கூறி சிஷை செய்வித்து அனுப்ப அவ்வாறே வரமும் பெறுகிறார்

பின்னாளில் அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர் கிருஷ்ணரிடம் சிவ மகிமையை கூறுமாறு வேண்ட உபமன்யு ரிஷி தனக்கு உரைத்த சிவ சகஸ்ர நாமத்தை கூறுகிறார்

இன்றும் உபமன்யு மஹரிஷி முக்கண்ணனை பூஜித்து வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சரி சிறுவனை ஏன் ஈசன் சோதித்தார்

ஒரு வேளை ஈசன் அவ்வாறு சோதிக்கவில்லையென்றால் பாலுக்காக கொடும் தவம் என்றே நாம் கூறி இருப்போம்
உபமன்யு ரிஷிக்கு ஈசனின் மேல் இருந்த பக்தி நமக்கு விளங்கி இருக்காது எதையும் தருவேன் என்றபோதும் சிவனை நிந்தித்த உன்னை அழித்து நானும் அழிவேன் என்பதில் இருக்கிறது ஈசன் மேல் கொண்ட பக்தி

நாம் சிறுபிள்ளையில் கதைகளில் கேள்விப்பட்டிருப்போம் ஒரு மந்திரவாதியின் உயிர் ஏழுகடல் மற்றும் ஏழு மலைக்கு அப்பால் இருக்கும் ஒரு கிளியுனுள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் என

அவ்வாறே ஈசனின் பெரும் அன்பு அவரை போற்றிய அடியார்களிடமே உள்ளது அவர்களை பூஜிப்பது ஈசனுக்கு பெரும் மனமகிழ்வை தரும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை இதை நாயன்மார்களின் வரலாற்றிலேயே தெளிவாக அறியலாம் நாயன்மார்கள் அனைவருமே சிவனடியார்களுக்கு செய்த சேவையே இதற்கு சாட்சி












No comments:

Post a Comment