Sunday, December 10, 2023

இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 5

முந்தைய பதிவு 👇👇

நிர்வாகம் மற்றும் செல்வம்

 " அருள்மொழி வர்மன் " இதுதான் இராஜராஜசோழரின் இயற்பெயர்


 தில்லை கோவிலுக்கு பல நிவந்தங்கள் அளித்து தொண்டு புரிந்ததால் வழங்கப்பட்டதே " இராஜராஜன் " என்ற பெயர்


 சைவத்திற்கு பெருந்தொண்டு புரிந்ததால் " சிவபாத சேகரன் " என்ற பெயரும் பெற்றவர்


 சைவத்திற்கு மட்டுமல்ல சமணமும், புத்தமும் போட்டி போட்டு வளர்ந்த காலத்தில் ஒரு நல்ல அரசனாக அவற்றிக்கும் மதிப்பளித்தார்.


குந்தவை ஜைனாலயம் சமணர்களுக்காகவும், குந்தவை புத்தவிகாரம் புத்தர்களுக்காகவும் அமைக்கப்பட்டது

(குந்தவை - இராஜராஜசோழனின் அக்கா)


அக்காலத்தில் விஜயம் மற்றும் கடாரத்தின் அரசனாக இருந்த விஜயோதுங்கவர்மன் புத்தமதத்திற்கு செய்யும் சேவையாக தனது தந்தையின் பெயரில் நாகப்பட்டினம் அருகே சூடாமணி புத்தவிகாரம் என்ற புத்தமடாலயத்தை அமைத்தார்


 இதற்கு நிதியாதாயம் வேண்டுமென ஒட்டுமொத்த ஆனைமங்கலம் ஊரையும் புத்தவிகாரத்திற்கு எழுதிவைத்தான் இராஜராஜன். இதன்பின்பு இது " இராஜராஜப்பெரும்பள்ளி " என அழைக்கப்பட்டது.


 முழு இலங்கையை கைப்பற்றியபின்னர் அங்கு சேதமடைந்த புத்தவிகாரங்களுக்கு திருப்பணி செய்தது மட்டுமில்லாமல் அங்கும் கோவில்களை எழுப்பினார் இராஜராஜசோழன்.


 இலங்கையில் மொத்தம் 14 கோவில்கள் இராஜராஜன் காலத்தில் அமைக்கப்பட்டவை. இன்றும் அவை சிதைந்த கோலத்தில், அக்கால சோழர்களின் தலைநகரமான பொலனறுவையில் அமைந்துள்ளது. அங்கும் இராஜராஜேஸ்வரம் என்ற கோவில் இருந்தது


 இத்தனை ஸ்தலங்களில் முக்கியமானது இராஜராஜரின் தாயான வானவன் மாதேவியின் பெயரில் அமைந்த வானவன் மாதேவிச்சரம் ஆகும்


 இக்கோவில்களுக்கென நிவந்தமாக பல நிலங்கள் விடப்பட்டு இருந்தன. தஞ்சை பெரியகோவிலுக்கு அங்கும் கூட நிலங்கள் இருந்ததாக கூறுவோறும் உளர்.


 அதிசிறந்த யானைப்படை , எதிர்க்க முடியாத கப்பல் படை, சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி என பொற்கால ஆட்சியை நடத்தியவர் இராஜராஜசோழன்


 இந்திய வரலாற்றிலேயே வெறும் 6 மன்னர்கள் மட்டும் தான் ஒரு தோல்வியையும் காணாது சென்ற போர்களிலெல்லாம் வெற்றி கண்டவர்கள், அதில் இராஜராஜ சோழரும், இராஜேந்திர சோழரும் அடங்குவர்.


தந்தையின் சிறந்த அஸ்திவாரத்தில் தனது மஹா சாம்ராஜ்யத்தை இராஜேந்திர சோழன் அமைத்தார் என்றால் மிகையில்லை


 தமிழகத்தில் 40 மற்றும் இலங்கையில் 14 கற்கோவில்களை அமைத்த மாமன்னன் மும்முடிசோழ இராஜராஜனின் நினைவிடம் தற்போது வாழைத்தோப்பில் ஆதரவற்று இருக்கிறது.





 சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு குஜராத் அரசு வானளாவிய சிலை வைத்தார்கள்.


 சத்ரபதி சிவாஜிக்கு மஹாராஷ்டிர அரசு விண்ணை முட்டும் சிலை வைக்கிறார்கள்


 ஆனால் ராஜராஜ சோழன் நினைவிடம் கூட பராமரிப்பின்றி இருப்பது பலரின் ஏக்கமாகவே தொடர்கின்றது...


 இதனால் இராஜராஜ சோழனுக்கு சிலை வைக்க வேண்டும், மணிமண்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கின்றது


 முன்பு இங்கு ஒரு நினைவு மண்டபம் இருந்ததாகவும், சிதைந்து இருந்த அதை முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சரி செய்ததாகவும் அங்கிருக்கும் பெருமாள் கோவிலின் கல்வெட்டு கூறுகின்றது


 படையெடுப்பில் சோழர்களின் மீது இருந்த கோபத்தை நினைவிடத்தின் மீது காட்டி தீர்த்து கொண்டார்கள் போல


 பராமரிப்பின்றி கிடந்த இந்த நினைவிடம் சற்று காலத்திற்கு முன்னர் தான் மேற்கூரையே அமைக்கப்பட்டது


 பொதுவாகவே உலகை ஆண்ட அரசர்கள் அனைவருக்கும் தங்கள் புகழ் நின்றுபேச வேண்டும் என ஆசை இல்லாமல் இருந்ததில்லை


 இதனால் எகிப்தின் பிரமீடுகள் துவங்கி வட இந்தியாவில் முகலாய மன்னர்கள் வரை தங்களுடைய சமாதிகளை பிரமாண்டமாக அமைப்பது வழக்கம்


 இன்று பெரும்பெரும் சமாதி அமைத்தவர்களை எல்லாம் உலகம் போற்றி நினைவில் வைத்ததா என்று தெரியாது


ஆனால் வாழைதோப்பின் நடுவில் சாமான்யன் போல உறங்கும் இராஜராஜனின் பெயர் இம்மண்ணில் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்


முடிந்தது....


இத்தொடரின் மற்ற பதிவுகளை படிக்க



முன்னுரை




கட்டுமானம்




கலைநுட்பம்




நிர்வாகம் மற்றும் செல்வம்




Reference books for this series


1. ஆயிரம் ஆண்டு அதிசயம் - அமுதன்


2. Rajarajeswaram- the pinnacle of Chola Art - B. Venkatraman


3. இராஜராஜேச்சரம் - குடவாயில் பாலசுப்ரமணியன்


4. பிற்காலச் சோழர் வரலாறு- டி.வி.சதாசிவப் பண்டாரத்தார்


5. ஆனைமங்கலம் மற்றும் திருவாலங்காட்டு செப்பேடுகள்


6. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார்


மற்றும் கல்வெட்டுகள் பற்றி சில புத்தகங்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையின் Tnarch site - ல் இருந்து எடுக்கப்பட்டவை


சர்வம் பிரகதீஸ்வரர் அர்ப்பணம்

இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 4

முந்தைய பதிவு 👇👇

கலைநுட்பம்

நிர்வாகம் மற்றும் செல்வம்


 " மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாடு " சோழதேசத்தின் பெருமையை உணர்த்தும் வாக்கியமிது..


 சரியான வரிக்காக ஒட்டுமொத்த நாட்டையையும் அளந்து விளைநிலம், தரிசு நிலம் என பிரித்தது


எளிதான நிர்வாகத்திற்காக

நகரம் < நாடு < வளநாடு < மண்டலம் எனப்பிரித்து அதற்கென தனித்தனி அதிகாரிகளை நியமித்தது


இவ்விரண்டும் இராஜராஜசோழரின் ஆட்சியில் நிகழ்ந்த பெரும் விஷயங்களென வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


 அரியலூர் மாவட்டத்தில், திருமழபாடி கோவில் சுவர் சேதமடைந்து விழ, புதிதாக எடுத்த சுவரில் பழைய கல்வெட்டுகளை பதிக்க ராஜராஜன் உத்தரவிட்டதை அக்கோவில் கல்வெட்டுகள் உரைக்கின்றன. எனில் சோழன் கல்வெட்டுகளுக்கு அளித்த முக்கியத்துவத்தினை உணரலாம்


 மன்னரின் பெயர்களை மட்டும் தான் கல்வெட்டுகள் தாங்க வேண்டுமா என்ன.. என ஒவ்வொரு சிறு ஊழியன் முதல், ஒரு கிண்ணம் குடுத்தவர் வரை பெரிய கோவிலின் கல்வெட்டில் பதித்து ஒரு படி மேலே போனார்


 " நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க.... "

இதுவே தஞ்சை பெரியகோவிலின் முதல் கல்வெட்டு. ஒவ்வொருவர் கொடுத்த நன்கொடைகளில் துவங்கி கோவிலை சுத்தம் செய்யும் பணியாளர்களின் சம்பளம் வரை அனைத்துமே கல்வெட்டுகளாக்கப்பட்டன.


 கோவிலின் தலைமை தச்சரான வீரசோழன் குஞ்சரமல்லனில் இருந்து கோவிலில் நாவிதனாக இருந்த இராஜராஜ பெரும்நாவிதன் வரை அனைவரின் பெயரையும் பொறித்தான் ராஜராஜன்


 அனைத்துக்‌ கல்வெட்டுக்களையும்‌ தொகுத்து நோக்கும்‌ போது கீழ்க்குறித்த செய்திகளை நாம்‌ அறிய முடிகிறது.


இக்கோயிலின்‌ நிர்வாக அலுவலராக விளங்கியவர்‌ பொய்கை நாட்டு கிழவன்‌ ஆதித்தன்‌ சூரியனான தென்னவன்‌ மூவேந்த வேளான்‌.


இராஜராஜனின்‌ இராஜகுருவாக விளங்கியவர்‌ ஈசான சிவபண்டிதர்‌.


இக்கோயிவின்‌ தலைமை அர்ச்சகராகத்‌ திகழ்ந்தவர்‌ பவணபிடரான்‌.


இக்கோயிவில்‌ கல்வெட்டுக்களை வெட்டிய அலுவலர்‌ பாளூர்கிழவன்‌.


கோயிலைக்‌ கட்டிய தலைமைச்‌ சிற்பி வீரசோழன்‌ குஞ்சர மல்லனான இராஜராஜ பெருந்தச்சன்‌.


அவனது உதவியாளர்கள்‌ மதுராந்தகனான நித்தவிநோதப்பெருந் தச்சனும்‌ ( இவர் தான் கங்கை கொண்ட சோழபுரத்தின் தலைமை சிற்பி )

இலத்திச்‌ சடையனான கண்டராதித்தப்பெருந்தச்சனும்‌ ஆவர்‌.


கோவிலில் வேலை செய்பவர்களுக்கெல்லாம் முடிதிருத்தும் நாவிதனுக்கு கூட தனது பெயரை பட்டமாய் அளித்து இராஜராஜ பெரும்நாவிதன் என கல்வெட்டில் பொறித்தார்


 இவர்கள் இல்லாமல்


கருவூலக்காரர்கள் - 4


கணக்கர்கள் - 7

அவர்களின் உதவியாளர்கள் - 9


பிரம்மசாரிகள் - 174 பேர்


ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெய் காவலர்கள் - 141 பேர்


இசை கலைஞர்கள் - 67


கணக்கர்கள் - 4

அவர்களின் உதவியாளர்கள் - 41


மொத்தம் 847 பேர்கள் பற்றியும், அவர்களின் ஊதியம் பற்றியும், அவர்களுக்கு வாரிசு இல்லாதபட்சத்தில் அவர்களின் வேலை யாருக்கு போகவேண்டும் வரை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ்வேதங்களாக கருதப்படும் தேவாரம், திருவாசகம் ஒலித்துகொண்டே இருக்க வேண்டுமென அதற்கென 50 பேரை தனியாக நியமித்தான்.


ஏற்கனவே நாட்டியப்பெண்கள் பற்றி கல்வெட்டில் இருந்ததை போன பதிவில் பார்த்தோம்


 பொதுவாகவே சோழர்களின் காலத்தில் கோவில்கள் சிறப்புற்று இருந்தன. இராஜராஜனின் சித்தப்பாவும், முந்தைய அரசருமான உத்தம சோழரின் மகன் மதுராந்தக கண்டராதித்தன் கோவில் கணக்குகளை பார்க்கும் பொறுப்பில் இருந்தார்

இவரின் மேற்பார்வையில் ஒரு கோவிலுக்கு நிதிபோதவில்லை என்றால் உடனடியாக பல நிலங்கள் நிவந்தங்களாக அளிக்கப்பட்டன

இவ்வாறு இராஜராஜனின் உயிர்த்துடிப்பான தஞ்சை பெரியகோவிலுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்கள் மிகவும் அதிகம்


 கோவிலின் தெளிவான நிர்வாக முறையே தமிழர்களின் உன்னத நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டென்றால் அது மிகையாகாது


 சரி கோவிலின் நிர்வாகம் பற்றி பார்த்தோம் அடுத்து கோவிலில் இருந்த செல்வங்கள் என்னென்ன..


 மன்னன் இராஜராஜசோழன் மட்டுமே 300 கிலோவிற்கும் அதிகமான தங்கம், பலநூறு கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் எண்ணிலடங்கா செப்பு பொருட்களை தானமாக வழங்கியுள்ளார்


 மேலை சாளுக்கிய போர் வெற்றி சோழர்களின் முக்கியமான வெற்றி ஆகும். இதனால் அப்போரின் வெற்றிக்கு பூஜைக்காக தங்கத்தினால் ஆன மலர்களை பரிசளித்தான்


 23 வகை முத்துக்கள், 11 வகையான வைரங்கள், 12 வகையான மாணிக்க கற்கள் என கோவிலுக்கு அளவில்லாமல் வழங்கி இருக்கிறார்


 மன்னரிலிருந்து ராணிகள், தளபதிகள், வணிகர்கள் என அனைவரும் பல்வேறு சிலைகளிலிருந்து, பூஜைக்கு தேவையான சிறுசிறு பொருட்கள் வரை நன்கொடை அளித்தனர்.


 இதையெல்லாம் விட கைலாய யாத்திரை சென்றவர்கள் சூரிய உதயத்தின் போது மேரு மலை தங்கமாய் சில நொடிகள் ஜொலிக்கும் என்று கூறி இருப்பார்கள் போல


இதனால் இராஜராஜன் " தட்சிணமேரு " என்றழைத்த 216 அடி உயர பெரியகோவில் விமானத்தை முழுதாய் பொன் வேய்ந்தான்




( முதலாம் பராந்தகன் தில்லைக்கு பொன் வேய்ந்தான் என பள்ளி பாடப்புத்தகத்திலேயே படித்து இருப்போம்


இராஜேந்திரன் காலத்தில் திருவாருர் கோவில் திருப்பணி செய்யப்பட்டு விமானம், கருவறையின் சுற்று சுவர் மற்றும் வாயில்கள் பொன் வேயப்பட்டன


இராஜாதிராஜன் காலத்தில் திருவீழிமிழலை கோவில் பொன் வேயப்பட்டது


இவையெல்லாம் அக்காலத்தில் சோழர்களின் செல்வ வளத்தை பறைசாட்டுகின்றன)


 கோவிலுக்காக எவர் சிறுபொருட்கள் தானமாக அளித்தாலும் அவை சரியான முறையில் அளந்து உடனே கல்வெட்டில் பதிக்கப்பட்டது


 இப்படி கல்வெட்டில் சொல்லப்பட்ட செய்திகளையெல்லாம் பார்க்கையில் தஞ்சை பெரியகோவில் இந்திரனின் அமராவதியை போல செல்வத்தில் செழித்ததை அறியலாம்


 சரி இனி சாவா - மூவா பேராடுகள் (சாவாத, முதுமை அடையாத பேராடுகள்) திட்டத்தை பற்றி பார்க்கலாம்


சொல்லிலேயே புதிர் உள்ள இது என்ன திட்டம்..?


 சரி இதற்கு அக்காலத்தில் சென்று பார்ப்போம்


ஒரு வணிகன் வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு வருகிறான். அவன் பிரார்த்தனை படி கோவிலில் தினமும் அவன் சார்பாக விளக்கு எரிய வேண்டும்


இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த வணிகன் கோவில் நிர்வாகத்தில் செலுத்த, அதற்குரிய ஆடு, மாடுகளை கோவில் நிர்வாகம் ஒரு ஏழைக்கு அளிப்பார்கள்.


அந்த ஏழையை பொறுத்தவரை அவன் தினம் ஒரு ஆழாக்கு நெய்யை மட்டும் கோவிலுக்கு செலுத்த வேண்டும். மேலும் மற்றதை வைத்து அவன் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளலாம்.


குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் எத்தனை மாடுகளை கோவிலில் வாங்கினானோ அதை அப்படியே திருப்பித்தர வேண்டும் (குட்டி போட்டால் ஏழைக்கு லாபம், மாடு இறந்தால் அவனுக்கு நட்டம்)


இதன்படி எண்ணிக்கை குறையாமல், முதுமை அடையாமல் அதே எண்ணிக்கையில் சாவா மூவா பேராடுகள் இருந்தன.


 கல்வெட்டின்படி


இதை தொடங்கி வைப்பதற்காக இராஜராஜசோழனே 2832 பசுக்கள்‌, 1644 ஆடுகள்‌, 30 எருமைகளை‌ தானமாகக்‌ கொடுத்தார்‌


இத்திட்டத்திற்காக கோவிலில் மொத்தம் 4128 பசுக்கள்‌, 6924 ஆடுகள்‌, 30 எருமைகள்‌ இருந்தன


ஒரு விளக்குக்குத்‌ தேவையான நெய்க்கு ஈடாக 96 பெட்டை ஆடுகள்‌ அல்லது 48 பசுக்கள்‌, 16 எருமை மாடுகள் தரப்பட்டன


 எடுத்துக்காட்டாக இதன்படி,


தஞ்சாவூர்ப்‌ புறம்படி (தஞ்சைப்‌ புறநகர்‌) காந்தர்வத்‌ தெருவில்‌ வசிக்கும்‌ இடையன்‌ சூற்றி பாக்கரனிடம்‌ (பாஸ்கரனிடம்‌) 48 பசுக்கள்‌ தரப்பெற்று ஒரு விளக்குக்கு நெய்‌ கொடுக்க வேண்டுமென்று கூறப்பெற்றது


இதைப்போலவே வணிகர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டு பெரிய கோவில் பிள்ளையார்க்கு அமுது படைக்க தினமும் 150 வாழை பழங்கள் தருமாறு பணிக்கப்பட்டது


சோழனின் ஆட்சியில் ஒரு செல்வந்தனின் வேண்டுதலில் கூட ஒரு ஏழையின் வாழ்வு செழித்தது


சற்றே யோசியுங்கள்


அக்காலத்தில் 1000 பேருக்கு மேல் ஊழியர்களை கொண்ட நிர்வாக கேந்திரமாகவும், செல்வத்தில் அளவில்லாமல் திளைத்து கலை மற்றும் கலாசாரத்தின் சங்கமமாக பிரகதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்திருப்பார்


அடுத்த பதிவு 👇👇


முடிவுரை


இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 3

முந்தைய பதிவு 👇👇

கட்டுமானம்


#கலைநுட்பம்


 தஞ்சை பெரிய கோவிலின் அற்புத சிற்பங்கள், பிரம்மாண்டமான நுழைவாயில்கள் என பலவற்றை நாம் ஏற்கனவே அறிவோம்.

இப்பதிவில் இலைமறை காயாக உள்ள சில ஆச்சரிய தகவல்களை பற்றி காணலாம்.


#அளவைகள்


 இத்தகைய பெரிய கட்டுமானம் எப்படி பிசகாமல் சரியாக கட்டப்பட்டது. போகிறபோக்கில் கற்களை அடுக்கியெல்லாம் இத்தகைய விமானத்தை எழுப்ப முடியாது, கற்களை சுற்றி அடுக்கும்போது சில செ.மீ மாறினாலும் விமானம் கோணலாகி இருக்கும்.

திரும்ப பிரித்து மாற்றி அடுக்குவதெல்லாம் பெரும் வேலை

எனில் ஒரே முறையில் சரியாக செய்ய அவர்கள் நிச்சயம் சில அளவீடுகளை பயன்படுத்தி இருப்பார்கள்


அப்படி என்ன அளவீடுகள் தான் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன


 சரி இனி தமிழர்களின் அளவீடுகளை தெளிவாக பார்க்கலாம்


ஒரு சிறிய கடுகு = 8 நுண்மணல்‌

ஒரு நுண்மணல்‌ = 8 மயிர்‌ நுனி

ஒரு மயிர்‌ நுனி = 8 துசும்பு

ஒரு துசும்பு = 8 கதிர்துகள்‌

ஒரு கதிர்துகள்‌ = 8 அணு

ஒரு அணு = 10 நுண்‌ அணு

ஒரு நுண்‌ அணு = 10 கோன்‌


அதாவது ஒரு கோன் என்பது அணுவில் நூறில் ஒரு பங்கு ஆகும்


 சரி இனி தஞ்சை கோவிலில் பிரான்சு நாட்டு அறிஞர்கள் கண்டறிந்த அளவீடுகளின் நுணுக்கங்கள் பற்றி பார்ப்போம்


ஒவ்வொரு தூணையும் இவர்கள் ஆராய்கையில் அனைத்தும் ஒரே அளவீடுகளில் இருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்தனர்


அவர்களின் கருத்துப்படி பெரிய கோவிலின் அடிப்படை அளவு 33 சென்டி மீட்டர் அதாவது சோழர் காலத்தின் படி 10 விரல் அகலமாகும் (ஒரு விரல் என்பது 8 நெல்மணிகளை வரிசையாக அடுக்கினால் கிடைக்கும் அளவாகும்)


 இதன் விகிதாச்சார அளவில் தான் பெரும்பாலும் பெரியகோவிலில் அனைத்துமே அமைக்கப்பட்டுள்ளன


பிரகதீஸ்வரரின் அளவு 3.96 மீட்டர் அதாவது 12 மடங்கு


சுற்றளவு 1.65 மீட்டர் (5 மடங்கு)


கருவறையின் அளவு 07.92 மீ × 07.92 மீ (24 மடங்கு)


தரையிலிருந்து சன்னிதானத்தின்‌ முதல்‌ தளம்‌ வரையிலான உயரம் 16.50 மீட்டர்‌ (50 மடங்கு)


கோவிலின் 13வது தளம் வரை 33 மீட்டர் (10 மடங்கு)


விமானத்தின் கழுத்துப்பகுதி 1.89 மீட்டர் (6 மடங்கு)


விமானத்தின் மேல்‌ இருக்கும்‌ பெரிய கல்லின்‌ உயரம்‌ 5.94 மீட்டர் (18 மடங்கு)


கலசத்தின் உயரம் 1.98 மீட்டர் (6 மடங்கு)


தரையிலிருந்து கோபுரத்தின் உச்சி வரை உள்ள உயரம் 59.40 மீட்டர் (180 மடங்கு)


கோவிலின் நுழைவாயிலான இராஜராஜன் வாயிலின் உயரம் 23.76 மீட்டர் (72 மடங்கு)


 அறிவியல் உச்சத்தில் இருக்கும் இக்காலத்தில் கூட இத்தனை துல்லியமாக ஒரு கோவிலை கட்டுவது நடக்காது


#ஓவியங்கள்


 சரி அடுத்து பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஓவியங்களை பற்றி பார்ப்போம்

ஒவியத்தை பொறுத்தவரை அண்ணாமலை பல்கலைகழகத்தின் வரலாற்று ஆசிரியரான S.K.கோவிந்தசாமி அவர்களின் பங்கு இன்றியமையாததாகும்


1931 - ம் ஆண்டு பெரியகோவிலின் ஆச்சர்யங்களை தேடுகையில் மழையினால் நாயக்கர் காலத்து ஒவியம் இருந்த பகுதி ஒன்று பெயர்ந்து விழ அதன் பின் மற்றொரு ஓவியம் தெரிந்தது

அதை ஆராய்கையில் அது சோழர்கால ஓவியம் என கண்டறிந்தார். அதாவது சோழர்களின் ஓவியத்திற்கு மேலே ஒரு அடுக்கு பொருத்தி அதன் மேல் நாயக்கர் காலத்தில் ஓவியம் வரையப்பட்டுள்ளது

நாயக்கர் காலத்து ஓவியங்களுக்கு சேதம் ஆகாமல் மற்ற ஓவியங்களை வெளிக்கொண்டு வந்தனர்


 1000 ஆண்டுகள் கழித்தும் பிரகாசிக்கும் ஓவியங்களில் திரிபுராந்தகர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு மெய்மறக்க வைக்கும்


இத்தனை ஆண்டுகள் அழியாமல் இருக்கும் வண்ணம், சிறு இடைவெளி மட்டுமே இருக்கும் பாதையில் எப்படி நீளமான ஓவியம் வரையப்பட்டது என்பதும், ஓவியனின் கற்பனை திறமையும் மேலும் பல விடயங்களும் இன்றும் ஆச்சர்யம் அளிக்கின்றன



#கரண_சிற்பங்கள்


 நடராஜரின் மேல்கொண்ட பக்தியால் பரதத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுத்தார் இராஜராஜன்


 ஆடல்வல்லோனின் சன்னதியில் இடையறாது நாட்டியம் நடக்கவேண்டும் என ஒவ்வொரு ஊரிலும் இறைவனுக்கு சேவை செய்துகொண்டிருந்த 400 நாட்டியப்பெண்கள் மற்றும் தலைக்கோலிகளை தஞ்சையில் குடியமர்த்தினான். இவர்களுக்கு துணையாக 132 இசைக்கலைஞர்களும் இருந்தனர்

இவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இல்லங்கள் வரை அனைத்தையுமே கல்வெட்டில் இன்றும் காணலாம்.


( தலைக்கோல் - வேந்தர்களின் வெண்கொற்ற கொடையை தாங்கி நிற்கும் கம்பம். இது இந்திரனின் மகனான ஜெயந்தனின் அம்சமாகும்


எதிரி மன்னனை வென்றபின் இந்த தலைக்கோலை வெட்டியெடுத்து வைர, வைடூயரிங்களால் அழகுப்படுத்தி பூஜித்து வருவான் மன்னன்


அரங்கேற்றத்தின் போது பூஜித்து உரிய மரியாதையுடன் யானையில் எடுத்து வரப்படும் இந்த தலைக்கோலால் பட்டம் பெறுபவளே தலைக்கோலி ஆவாள்


Ref : சிலப்பதிகாரம் )


 ஆடல்வல்லோனான நடராஜரின் மீது கொண்ட பக்தியால் பரதத்தின் 108 கரணங்களை சிற்பங்களாக வடிவமைக்க நினைத்தார் இராஜராஜ சோழன்


 எம்பெருமான் ஈசனே பரதம் ஆடுமாறு வடிவமைக்கப்பட்ட இந்த சிற்பங்கள் ஏதோ ஒரு காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன


 1956 ஆம் ஆண்டு தொல்லியல் துறையின் திரு பாலகிருஷ்ணன் அவர்களால் கண்டறியப்பட்ட இச்சிற்பதொகுதியில் மொத்தம் 108 கரணங்களில் 81 கரணங்களே பூர்த்தியடைந்துள்ளன. என்ன காரணத்தால் இவை பூர்த்தியடையவில்லை என தெரியவில்லை


#சிலைகள்


 அடுத்தபடியாக கல்வெட்டின்படி பார்த்தால் கோவிலுக்கென இராஜராஜ சோழனும் ராணிகள் மற்றும் தளபதிகளும் பற்பல சிலைகளை அளித்துள்ளனர்


 இராஜராஜசோழன் 20 சிலைகள் (குறிப்பாக சண்டேசுவரரின் வாழ்க்கையையே சிற்ப தொடராக மட்டுமில்லாமல் சிலை தொகுதியாகவும் குடுத்தார்)

அவரின் அக்காவான குந்தவை 5 சிலைகள் என ராணிகளில் துவங்கி தளபதிகள் வரை மொத்தம் 66 சிலைகள் கோவிலுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல சிலைகள் இன்று இல்லை


 இராஜராஜ சோழன் கொடுத்த தட்ஷிணமேருவிடங்கர் மற்றும் குந்தவை தேவி அளித்த உமா பரமேஸ்வரியார் சிலை இரண்டையும் தற்போது காண்கையில் மற்ற சிலைகளின் அருமை புரியும்


 சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் அளித்த அர்த்த நாரீஸ்வரர் சிலையில் ஈசனுக்கும், உமா தேவிக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக ஈசனின் பாதி செம்பிலும், உமா தேவியின் பாகம் செம்பின் மேல் பித்தளை பூசியும் செய்த கலைஞனின் திறமை அற்புதமானது


 இதில் கோவிலின் நிர்வாக அலுவலராக இருந்த தென்னவன் மூவேந்த வேளாளன் மன்னர் மேல் கொண்ட அன்பால் இராஜராஜ சோழன் மற்றும் உலகமகா தேவி சிலைகளை அளித்தார் மன்னரின் மறைவிற்கு பின் இவ்விரு சிலைகள் வணங்கப்பட்டு வந்தன


60 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான பிரிவு மீட்டெடுத்தது.

( இன்றைய மதிப்பு 150 கோடி)


சென்னைக்கு ரயிலில் வந்த இந்த சிலைகளுக்கு தேவாரம், திருவாசகம் பாடி மலர் தூவி வரவேற்பு நடந்தது


 இத்தனை படையெடுப்புகள், அழிவுகளை தாண்டியும் நிற்கும் இவைகளால் அன்றைய காலத்தில் ஓவியம், சிற்பக்கலை மற்றும் உலோக வார்ப்பு எத்தனை முன்னேற்றத்தில் இருந்து இருக்கும் என்பதை தெளிவாக அறிய முடிகிறது


இனி அடுத்தப்பதிவில் கோவிலின் நிர்வாகம் மற்றும் செல்வங்கள் பற்றி பார்க்கலாம்



அடுத்த பதிவு 👇👇


நிர்வாகம் மற்றும் செல்வம்

இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 2


முந்தைய பதிவு 👇👇


முன்னுரை


#கட்டுமானம்


 முதல் பதிவில் பெரிய கோவிலின் கட்டுமானம் எப்படி பட்டது என காண்போம்


 2000 ஆண்டுகளுக்கு முன் சோழப்பேரரசனான கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையே பலமுறை காவிரியின் வெள்ளத்திற்கு போக்கு காட்டி நிற்கையில் 1000 வருடங்களுக்கு முன் இராஜராஜ சோழன் அமைத்த தஞ்சை பெரிய கோவில் கம்பீரமாய் நிற்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை


 முழுக்க முழுக்க இராஜ ராஜ சோழனின் கற்பனையாலும், அவரின் குருவும், சித்தர்களில் ஒருவரான கருவூராரின் அறிவுரையாலும் உருவானதே பெருவுடையார் கோவில்


#அஸ்திவாரம்


 இத்தனை காலம் கோவில் கம்பீரமாக நிற்பதற்கு முதன்மை காரணம் அஸ்திவாரம்

சரி கோவிலின் அஸ்திவாரம் எப்படிப்பட்டது...?


 2010-ம் ஆண்டு கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவிற்காக கோவில் வளாகத்திலேயே ஆழ்கிணறு தோண்டினர்.

கோவில் அமைந்திருக்கும் பகுதி சுக்கான் பாறை பகுதியாகும். ஆனால் ஆச்சரியமாக அங்கு தோண்ட தோண்ட கிடைத்தது பருமணல் தான், 350 அடிகளுக்கு மேல் தான் களிமண் வந்தது ( பரு + மணல் இது மலைப்பகுதியில் கிடைக்கும், ஆற்று மணலை விட அளவில் பெரிய துகள்களை கொண்டது )

உடனடியாக அப்பணி நிறுத்தப்பட்டது, இன்றும் கோவிலை சுற்றி போர் போட சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்


 அதாவது கோவிலை அமைக்கும் முன் பெரிய குழி தோண்டி அதில் பருமணலை கொட்டி நிரப்பி இருக்கிறார்கள்.


சாதாரணமாக மணலில் கட்டப்பட்டால் வேறு அதுவே பாத்திரத்தில் மணலை இடும்போது அதன் குணம் மாறும்

நில அதிர்வுகளை அது மேலே அனுப்பாது, மேலும் அது எவ்வளவு பெரிய கட்டுமானம் என்றாலும் இறுக்கி பிடிக்கும்

சரியாக சொன்னால் அரிசி மற்றும் பென்சிலை வைத்து சிறுவயதில் நாம் செய்த உராய்வு சம்மந்தப்பட்ட சோதனை தான்


பென்சில் மற்றும் அரிசி சோதனை


https://www.vikatan.com/news/kids/101668-


 இத்தகைய கட்டுமானத்தை தாங்க குறைந்தது ஒரு கோடி கன அடி பரு மணல்கள் கோவிலின் கீழ் கொட்டப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றன



#கிரானைட்


 சரி அடுத்து சுற்றுவட்டாரத்தில் மலைகளே இல்லாத தஞ்சையில் எப்படி இத்தனை பாறைகள்


 1,50,000 டன்‌ எடை கொண்ட கருங்கற்கள்‌ அதாவது தற்போதைய கணக்குப்படி 50 ஆயிரம்‌ லாரிகளில்‌ கொண்டு வந்து இருக்கவேண்டிய பெரும் கற்பாறைகளை எப்படியோ கொண்டுவந்து பிரம்மாண்டமாக செதுக்கி இருக்கிறார்கள்


 கோவிலில் பயன்படுத்திய அனைத்து கற்களுமே அளவில் பிரம்மாண்டமான பெரிய கற்களே குறிப்பாக சொன்னால் கோயிலின் வாயில்களான கேரளாந்தகன் வாயில் மற்றும் இராஜராஜன் வாயிலில் 4 அடி நீளம் , 3 அடி அகலம் கொண்ட 40 அடி உயர ஒரே கல்லில்‌ ஆன தூண்கள்‌ பயன்படுத்தப்பட்டுள்ளன


(கேரளா + அந்தகன் அதாவது சேரர்களுக்கு எமனை போன்றவன் இது இராஜராஜசோழனின் மற்றொரு பெயர்)


 மலைகள் அற்ற காவிரி டெல்டாவான தஞ்சையில் எப்படி இத்தனை கிரானைட் கற்கள் என ஆய்வாளர்கள் யோசிக்கையில் அவர்கள் கூறிய இடம் தஞ்சையிலிருந்து பல மைல் தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றான்டார் கோவில் தான். கிட்டதட்ட தஞ்சையில் உள்ள கல்லையும் சோதித்ததில் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதை கண்டறிந்தனர்

மேலும் தஞ்சைக்கு அருகில் அம்மாப்பேட்டை சாலையில் உள்ள உடையார் கோவில் கல்வெட்டில் " நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து சிலை கொண்டு வந்து " என்ற வரிகள் இதை உறுதிப்படுத்தின.


சரி இத்தனை கற்கள் செதுக்கப்பட்டால், எவ்வளவு கழிவு வந்து இருக்கும் அவை எங்கு சென்றன..?


#குழி_குமிழ்


 மேலும் முக்கியமான விஷயம் என்றால் தஞ்சை பெரியகோவிலில் சிமெண்ட மற்றும் சுண்ணாம்பு போன்ற இருகற்களை இணைக்கும் கலவை எதுவும் உபயோகப்படுத்தப்படவில்லை


 அனைத்துமே குழி (ம) குமிழ் அமைப்பு அதாவது Interlocking Stones system, கிட்டத்தட்ட Puzzle போன்றது.

ஒரு கல்லை சமன்படுத்தி அதோடு இணையும் சரியான வடிவத்தில் உள்ள கல்லை குழி-குமிழ் முறையில் இணைப்பது, இது தான் கோபுரத்தில் துவங்கி சுற்றுசுவர் வரை கடைபிடிக்கப்பட்ட நுணுக்கம் ஆகும்.


 கோவிலின் விமானம் இதுபோன்று கற்களை இம்மி பிசகாமல் அடிக்கி கட்டப்பட்டதே பிறகு இந்த வடிவம் சிதறாமல் இருக்க மேலே ஒரு பெரிய எடையை வைத்தார்கள்

கிட்டதட்ட 10 டன் எடையுள்ள 8 நந்திகள் மற்றும் 80 டன் எடையுள்ள கலசத்தை தாங்கும் உச்சிக்கல்


( இந்தக்கல் ஒரே கல் என சொல்லப்பட்டாலும் உண்மையில் 8 கற்களை கொண்டு ஆரஞ்சு பழம் போல இணைக்கப்பட்டு உருவாக்கியதே


Ref : குடவாயில் பாலசுப்பிரமணியன்)


 கோவிலுக்கு சற்றுதூரத்தில் உள்ள சாரப்பள்ளம் எனும் ஊரிலிருந்து சாரம் அமைத்து இக்கல் ஏற்றப்பட்டதாகவும் கூறுவர்

ஆனால் கோவில் சுருள்தள வடிவில் சாரம் அமைத்து கட்டப்பட்டதே. சாரம் கட்ட மணல் தோண்டப்பட்ட இடமாதலால் சாரப்பள்ளம் என மருவி இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து, மேலும் அவ்வூர் 7 கி.மீ தள்ளி இருக்கும் ஊராகும்.

தற்போது பெரிய கோயிலுக்குத் தென்புறம் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுவரை நீண்ட மேடாகக் காட்சியளிப்பது அப்படிச் சுருள் சாய்வுதளம் அமைக்கப்பட்டதற்கான மண் தான் என்பது குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கருத்து.


#தட்சிண_மேரு


 சரி மற்றகோவில்களை போல விமானம் சிறிதாக இல்லாமல் 216 அடி பிரம்மாண்ட விமானம் ஏன் அமைக்கப்படவேண்டும்..?

( அக்காலத்தில் வாயில் கோபுரங்கள் பெரிதாக கட்டும் வழக்கமும் இல்லை, பெரிய கோவிலின் வாயில் கோபுரங்கள் தான் மற்றவற்றிற்கு அடிப்படை )


 கைலாய யாத்திரை பற்றி நம்மில் பலரும் அறிவோம் ஈசனின் இருப்பிடமான மலையை லிங்கமாகவே பாவித்து அதை வணங்குவதில் முடிகிறது கைலாய யாத்திரை

இன்றும் பல ஸ்தலங்கள் தென்கயிலாயம் என்று போற்றப்பட்டாலும் கைலாயத்தை பிரதிபலிக்கும் எதுவும் இல்லை என இராஜராஜன் நினைத்தார் போலும்

கல்வெட்டின்படி இவ்விமானத்தின் பெயர் " தட்சிணமேரு " அதாவது தென்திசையில் உள்ள மேரு


 ஈசன் வாசம் செய்யும் மேரு மலையின் ரூபமாக அமைந்ததே இந்த பிரம்மாண்ட விமானம் இதையே ஈசனின் வடிவமாகவும் வடிவமைத்தார் இராஜராஜ சோழன்


( https://seetharaman007.blogspot.com/.../06/blog-post.html... )


 கைலாய மலை சூர்ய உதயத்தின் போது பனியில் ஒளி எதிரொளிப்பால் தங்கமலை போன்று பிரகாசிக்கும் ஆனால் தட்சிணமேரு என்றுமே பிரகாசிக்கவேண்டும் என விமானம் முழுதும் தங்க தகடுகளை பதித்தார்


இராஜராஜசோழன் கயிலாயத்தையே பெரும்முயற்சியால் தஞ்சையில் அமைத்தார் என்றால் அது மிகையாகாது


#திருச்சுற்று_மாளிகை


 கோவிலின் சுற்றுப்பாதையை பொறுத்தவரை அதை அமைத்தவர் இராஜராஜனின் சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் ஆவார்


 திருச்சுற்று மாளிகை என அழைக்கப்படும் சுற்றுப்பாதையில் மொத்தம்‌ 36 பரிவார ஆலயங்கள்‌ இருக்கின்றன. இவைகளில் அஷ்டதிக் பாலகர்களின் ஆலயங்கள் மட்டும் தற்போது சிதைந்த நிலையிலாவது உள்ளன. இவை தவிர எட்டு பிரகார தெய்வங்களின் ஆலயங்களும் உள்ளன ஆனால் அனைத்துமே படையெடுப்புகளால் சிதைந்துவிட்டன

மேலும் " திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி " என்ற வரி அம்மன் கோவில் வெளியே திருச்சுற்று மாளிகையில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன

ஆலயங்களில் சிலைகளின் கீழ் இருந்த நவமணிகளை கொள்ளையடிக்க இந்த ஆலயங்களில் இருந்த சிலைகள் உடைத்து எடுக்கப்பட்டன.


 ஆய்வாளர்களின் கருத்துப்படி திருச்சுற்று மாளிகை இரண்டு அடுக்கு கொண்ட மாடியாக இருந்து பின்னாளில் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும் ஏனென்றால் அதன் மேல் தளத்தில் அதற்கான கூறுகள் இன்றும் உள்ளது


 கி.பி 750-ல் இரண்டாம்‌ நந்திவர்ம பல்லவன்‌ சோழநாட்டில்‌ நந்திபுரத்து ஆயிரத்தளி எனும் ஆயிரம்‌ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பெருங்கோவில் ஒன்று எழுப்பினார் ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பில் அவை அழிய அதில் 108 லிங்கங்களை மீட்டு பிரகாரத்தில் 1801 ஆம் இரண்டாம் சரபோஜி மன்னர் பிரதிஷ்டை செய்தார்


#நீர்_மேலாண்மை


 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இரண்டு வடிகால்கள் அமைத்து கட்டப்பட்ட கோவில் பெரிய கோவில்

அபிசேகம் செய்யப்பட்ட நீரும், தூசியாக வரும் நீரும் தெற்கு பக்கம் வழியாக நந்தவனத்திற்கும், மழையினால் வரும் அதிகபடியான நீர் வடக்கு பக்கம் மூலமாக சிவகங்கை குளத்திற்கும் செல்கின்றன


 " சோழநாடு சோறுடைத்து " என்பதற்கு முக்கிய காரணம் சோழர்களின் நீர் மேலாண்மையே. சோழர்கள் காலத்தில் வெட்டப்பட்ட வாய்க்கால்கள், ஏரிகள் எண்ணிலடங்காதவை


 இந்தியாவின் நீர் பாசன தந்தை என அழைக்கப்படுபவரான சர் ஆர்தர் காட்டன் கரிகாலன் அமைத்த கல்லணையை கண்டு பிரமித்து ஆங்கிலத்தில் " Grand anicut " என பெயரிட்டார்.

கோதாவரி நதியில் தவ்லேஸ்வரம் அணை , தமிழகத்தில் மேலணை மற்றும் கீழணையை கரிகாலனின் நுட்பத்தை பின்பற்றியே அமைத்தார்.

இதனால் செலவுகள் பல குறைந்து மேலணை என்றழைக்கப்படும் முக்கொம்பை 2 லட்ச ரூபாயில் கட்டி முடிக்க முடிந்தது


 ஆந்திராவில் மட்டும் 3000 சிலைகள் உள்ள இந்திய நீர் பாசன தந்தையான இவருக்கே கரிகால சோழன் தான் குரு


#நிழல்_காரணம்


 கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது என சிலர் சொன்னாலும் காலையிலும், மாலையிலும் நிழல் விழும் இது வதந்தி என கூறுவோறும் உண்டு

உண்மையில் நண்பகல் அதாவது 12 மணிக்கு விமானத்தின் நிழல் கீழே விழாது இதிலென்ன ஆச்சர்யம்

ஒரு கட்டிடம் 0.0 டிகிரி நேராக அதாவது துளி கோணம் கூட சாயாமல் செங்குத்தாக இருந்தால் மட்டுமே அதன் நிழல் உச்சிவேளையில் கீழ் விழாது


 ஒரு கட்டுமானம் 0.0° நேராக கட்டுவது உண்மையில் பெரும் சாதனை தான் அதுவும் 1000 வருடங்கள் கழித்தும் தனது காலத்தில் 1679-ல் துவங்கி இன்றுவரை பத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களை சந்தித்தும் துளிகூட மாறாமல் இருக்கும் தஞ்சை பெரிய கோவில் சாதனையின் உச்சம்


#சுரங்க_பாதை


 தற்போது சுரங்கத்தில் மெட்ரோ போவது ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால் அன்று இராஜராஜன் குதிரையில் சுரங்கத்தின் வழியை பீரகதீஸ்வரரை தரிசனம் செய்தார்

இன்றும் நூற்றுக்கணக்கான சிக்கல்களை கொண்ட சுரங்கபாதைகள் தஞ்சை பெரியகோவிலில் காணப்படுகின்றன ஆனால் அவை ஆபத்து மிகுந்தவை என்பதால் மூடப்பட்டுள்ளன


 பொதுவாகவே அக்காலங்களில் சுரங்கபாதைகள் முக்கிய பங்கு வகித்தன பயணம் எளிது என்பது முதன்மை காரணமாக இருந்தாலும் சுரங்களினால் ஆபத்து காலங்களில் எளிதாக வெளியேற முடியும்


 மிகவும் சிக்கலான அமைப்பாக இருப்பதால் பாதை தெரியாதவர்கள் உள்ளே நுழைந்தால் விஷவாயு, விஷஜந்துக்கள் முதல் பல இடர்களில் சிக்கி மரணமடைவார்கள்


 ஆபத்து காலங்களில் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும் என்பதால் பெரும்பாலும் இவை அந்தப்புறத்திலிருந்தே துவங்கும்


 அவ்வாறே கோட்டை எதிரிகளிடம் சிக்கிவிட்டால் கஜானாவில் உள்ள செல்வங்களை வெளியிலிருந்தே மீட்கலாம் என்பதால் அந்நாட்டின் செல்வங்களும் பெரும்பாலும் இந்த சுரங்கபாதைக்கு அடியிலேயே இருக்கும். சுரங்க பாதைகளின் ரகசியம் அரசன் முதலிய முக்கியமானவர்களுக்கு மட்டுமே தெரியுமென்பதால் இப்படி வைப்பது பாதுகாப்பானது


 முக்கிய பாதைகள் ஆறுகள் குளங்களுக்கு அடியிலும் அமைக்கப்பட்டு இருக்கும். எதிரிகள் சுரங்க பாதைகளின் ரகசியம் அறிந்தால் ஒரு பாறையை குறிப்பிட்ட இடத்தில் உருட்டி விடுவதாலேயே அந்த சுரங்கபாதைகளில் நீர் புகுந்து உபயோகமற்றதாகிவிடும்


 பொதுவாகவே நமது கோவில்கள் கம்பீரமாக கோட்டை போல் இருப்பதால் ஆங்கிலேயர்கள் முதல்கொண்டு பலர் சிப்பாய்களின் கூடாரமாகவும் பாதுகாப்பு அரண்களாகவும் போர்களில் பயன்படுத்தினர் அப்படி விற்களில் துவங்கி பீரங்கி வரை எதிர்த்தும் இன்னும் அழகு குறையாமல் நிற்கின்றது இராஜராஜேஸ்வரம்


 அடுத்த பதிவில் கோவில் கட்ட பயன்படுத்திய அளவுகள் என்ன மேலும் கோவிலில் அமைந்த ஓவியங்கள், கரண சிற்பங்கள் மற்றும் சிலைகளை பற்றி பார்ப்போம்


அடுத்த பதிவு 👇👇


கலைநுட்பம்