Sunday, December 10, 2023

இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 5

முந்தைய பதிவு 👇👇

நிர்வாகம் மற்றும் செல்வம்

 " அருள்மொழி வர்மன் " இதுதான் இராஜராஜசோழரின் இயற்பெயர்


 தில்லை கோவிலுக்கு பல நிவந்தங்கள் அளித்து தொண்டு புரிந்ததால் வழங்கப்பட்டதே " இராஜராஜன் " என்ற பெயர்


 சைவத்திற்கு பெருந்தொண்டு புரிந்ததால் " சிவபாத சேகரன் " என்ற பெயரும் பெற்றவர்


 சைவத்திற்கு மட்டுமல்ல சமணமும், புத்தமும் போட்டி போட்டு வளர்ந்த காலத்தில் ஒரு நல்ல அரசனாக அவற்றிக்கும் மதிப்பளித்தார்.


குந்தவை ஜைனாலயம் சமணர்களுக்காகவும், குந்தவை புத்தவிகாரம் புத்தர்களுக்காகவும் அமைக்கப்பட்டது

(குந்தவை - இராஜராஜசோழனின் அக்கா)


அக்காலத்தில் விஜயம் மற்றும் கடாரத்தின் அரசனாக இருந்த விஜயோதுங்கவர்மன் புத்தமதத்திற்கு செய்யும் சேவையாக தனது தந்தையின் பெயரில் நாகப்பட்டினம் அருகே சூடாமணி புத்தவிகாரம் என்ற புத்தமடாலயத்தை அமைத்தார்


 இதற்கு நிதியாதாயம் வேண்டுமென ஒட்டுமொத்த ஆனைமங்கலம் ஊரையும் புத்தவிகாரத்திற்கு எழுதிவைத்தான் இராஜராஜன். இதன்பின்பு இது " இராஜராஜப்பெரும்பள்ளி " என அழைக்கப்பட்டது.


 முழு இலங்கையை கைப்பற்றியபின்னர் அங்கு சேதமடைந்த புத்தவிகாரங்களுக்கு திருப்பணி செய்தது மட்டுமில்லாமல் அங்கும் கோவில்களை எழுப்பினார் இராஜராஜசோழன்.


 இலங்கையில் மொத்தம் 14 கோவில்கள் இராஜராஜன் காலத்தில் அமைக்கப்பட்டவை. இன்றும் அவை சிதைந்த கோலத்தில், அக்கால சோழர்களின் தலைநகரமான பொலனறுவையில் அமைந்துள்ளது. அங்கும் இராஜராஜேஸ்வரம் என்ற கோவில் இருந்தது


 இத்தனை ஸ்தலங்களில் முக்கியமானது இராஜராஜரின் தாயான வானவன் மாதேவியின் பெயரில் அமைந்த வானவன் மாதேவிச்சரம் ஆகும்


 இக்கோவில்களுக்கென நிவந்தமாக பல நிலங்கள் விடப்பட்டு இருந்தன. தஞ்சை பெரியகோவிலுக்கு அங்கும் கூட நிலங்கள் இருந்ததாக கூறுவோறும் உளர்.


 அதிசிறந்த யானைப்படை , எதிர்க்க முடியாத கப்பல் படை, சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி என பொற்கால ஆட்சியை நடத்தியவர் இராஜராஜசோழன்


 இந்திய வரலாற்றிலேயே வெறும் 6 மன்னர்கள் மட்டும் தான் ஒரு தோல்வியையும் காணாது சென்ற போர்களிலெல்லாம் வெற்றி கண்டவர்கள், அதில் இராஜராஜ சோழரும், இராஜேந்திர சோழரும் அடங்குவர்.


தந்தையின் சிறந்த அஸ்திவாரத்தில் தனது மஹா சாம்ராஜ்யத்தை இராஜேந்திர சோழன் அமைத்தார் என்றால் மிகையில்லை


 தமிழகத்தில் 40 மற்றும் இலங்கையில் 14 கற்கோவில்களை அமைத்த மாமன்னன் மும்முடிசோழ இராஜராஜனின் நினைவிடம் தற்போது வாழைத்தோப்பில் ஆதரவற்று இருக்கிறது.





 சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு குஜராத் அரசு வானளாவிய சிலை வைத்தார்கள்.


 சத்ரபதி சிவாஜிக்கு மஹாராஷ்டிர அரசு விண்ணை முட்டும் சிலை வைக்கிறார்கள்


 ஆனால் ராஜராஜ சோழன் நினைவிடம் கூட பராமரிப்பின்றி இருப்பது பலரின் ஏக்கமாகவே தொடர்கின்றது...


 இதனால் இராஜராஜ சோழனுக்கு சிலை வைக்க வேண்டும், மணிமண்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கின்றது


 முன்பு இங்கு ஒரு நினைவு மண்டபம் இருந்ததாகவும், சிதைந்து இருந்த அதை முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சரி செய்ததாகவும் அங்கிருக்கும் பெருமாள் கோவிலின் கல்வெட்டு கூறுகின்றது


 படையெடுப்பில் சோழர்களின் மீது இருந்த கோபத்தை நினைவிடத்தின் மீது காட்டி தீர்த்து கொண்டார்கள் போல


 பராமரிப்பின்றி கிடந்த இந்த நினைவிடம் சற்று காலத்திற்கு முன்னர் தான் மேற்கூரையே அமைக்கப்பட்டது


 பொதுவாகவே உலகை ஆண்ட அரசர்கள் அனைவருக்கும் தங்கள் புகழ் நின்றுபேச வேண்டும் என ஆசை இல்லாமல் இருந்ததில்லை


 இதனால் எகிப்தின் பிரமீடுகள் துவங்கி வட இந்தியாவில் முகலாய மன்னர்கள் வரை தங்களுடைய சமாதிகளை பிரமாண்டமாக அமைப்பது வழக்கம்


 இன்று பெரும்பெரும் சமாதி அமைத்தவர்களை எல்லாம் உலகம் போற்றி நினைவில் வைத்ததா என்று தெரியாது


ஆனால் வாழைதோப்பின் நடுவில் சாமான்யன் போல உறங்கும் இராஜராஜனின் பெயர் இம்மண்ணில் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்


முடிந்தது....


இத்தொடரின் மற்ற பதிவுகளை படிக்க



முன்னுரை




கட்டுமானம்




கலைநுட்பம்




நிர்வாகம் மற்றும் செல்வம்




Reference books for this series


1. ஆயிரம் ஆண்டு அதிசயம் - அமுதன்


2. Rajarajeswaram- the pinnacle of Chola Art - B. Venkatraman


3. இராஜராஜேச்சரம் - குடவாயில் பாலசுப்ரமணியன்


4. பிற்காலச் சோழர் வரலாறு- டி.வி.சதாசிவப் பண்டாரத்தார்


5. ஆனைமங்கலம் மற்றும் திருவாலங்காட்டு செப்பேடுகள்


6. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார்


மற்றும் கல்வெட்டுகள் பற்றி சில புத்தகங்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையின் Tnarch site - ல் இருந்து எடுக்கப்பட்டவை


சர்வம் பிரகதீஸ்வரர் அர்ப்பணம்

No comments:

Post a Comment