முந்தைய பதிவு 👇👇
#கலைநுட்பம்
தஞ்சை பெரிய கோவிலின் அற்புத சிற்பங்கள், பிரம்மாண்டமான நுழைவாயில்கள் என பலவற்றை நாம் ஏற்கனவே அறிவோம்.
இப்பதிவில் இலைமறை காயாக உள்ள சில ஆச்சரிய தகவல்களை பற்றி காணலாம்.
#அளவைகள்
இத்தகைய பெரிய கட்டுமானம் எப்படி பிசகாமல் சரியாக கட்டப்பட்டது. போகிறபோக்கில் கற்களை அடுக்கியெல்லாம் இத்தகைய விமானத்தை எழுப்ப முடியாது, கற்களை சுற்றி அடுக்கும்போது சில செ.மீ மாறினாலும் விமானம் கோணலாகி இருக்கும்.
திரும்ப பிரித்து மாற்றி அடுக்குவதெல்லாம் பெரும் வேலை
எனில் ஒரே முறையில் சரியாக செய்ய அவர்கள் நிச்சயம் சில அளவீடுகளை பயன்படுத்தி இருப்பார்கள்
அப்படி என்ன அளவீடுகள் தான் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன
சரி இனி தமிழர்களின் அளவீடுகளை தெளிவாக பார்க்கலாம்
ஒரு சிறிய கடுகு = 8 நுண்மணல்
ஒரு நுண்மணல் = 8 மயிர் நுனி
ஒரு மயிர் நுனி = 8 துசும்பு
ஒரு துசும்பு = 8 கதிர்துகள்
ஒரு கதிர்துகள் = 8 அணு
ஒரு அணு = 10 நுண் அணு
ஒரு நுண் அணு = 10 கோன்
அதாவது ஒரு கோன் என்பது அணுவில் நூறில் ஒரு பங்கு ஆகும்
சரி இனி தஞ்சை கோவிலில் பிரான்சு நாட்டு அறிஞர்கள் கண்டறிந்த அளவீடுகளின் நுணுக்கங்கள் பற்றி பார்ப்போம்
ஒவ்வொரு தூணையும் இவர்கள் ஆராய்கையில் அனைத்தும் ஒரே அளவீடுகளில் இருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்தனர்
அவர்களின் கருத்துப்படி பெரிய கோவிலின் அடிப்படை அளவு 33 சென்டி மீட்டர் அதாவது சோழர் காலத்தின் படி 10 விரல் அகலமாகும் (ஒரு விரல் என்பது 8 நெல்மணிகளை வரிசையாக அடுக்கினால் கிடைக்கும் அளவாகும்)
இதன் விகிதாச்சார அளவில் தான் பெரும்பாலும் பெரியகோவிலில் அனைத்துமே அமைக்கப்பட்டுள்ளன
பிரகதீஸ்வரரின் அளவு 3.96 மீட்டர் அதாவது 12 மடங்கு
சுற்றளவு 1.65 மீட்டர் (5 மடங்கு)
கருவறையின் அளவு 07.92 மீ × 07.92 மீ (24 மடங்கு)
தரையிலிருந்து சன்னிதானத்தின் முதல் தளம் வரையிலான உயரம் 16.50 மீட்டர் (50 மடங்கு)
கோவிலின் 13வது தளம் வரை 33 மீட்டர் (10 மடங்கு)
விமானத்தின் கழுத்துப்பகுதி 1.89 மீட்டர் (6 மடங்கு)
விமானத்தின் மேல் இருக்கும் பெரிய கல்லின் உயரம் 5.94 மீட்டர் (18 மடங்கு)
கலசத்தின் உயரம் 1.98 மீட்டர் (6 மடங்கு)
தரையிலிருந்து கோபுரத்தின் உச்சி வரை உள்ள உயரம் 59.40 மீட்டர் (180 மடங்கு)
கோவிலின் நுழைவாயிலான இராஜராஜன் வாயிலின் உயரம் 23.76 மீட்டர் (72 மடங்கு)
அறிவியல் உச்சத்தில் இருக்கும் இக்காலத்தில் கூட இத்தனை துல்லியமாக ஒரு கோவிலை கட்டுவது நடக்காது
#ஓவியங்கள்
சரி அடுத்து பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஓவியங்களை பற்றி பார்ப்போம்
ஒவியத்தை பொறுத்தவரை அண்ணாமலை பல்கலைகழகத்தின் வரலாற்று ஆசிரியரான S.K.கோவிந்தசாமி அவர்களின் பங்கு இன்றியமையாததாகும்
1931 - ம் ஆண்டு பெரியகோவிலின் ஆச்சர்யங்களை தேடுகையில் மழையினால் நாயக்கர் காலத்து ஒவியம் இருந்த பகுதி ஒன்று பெயர்ந்து விழ அதன் பின் மற்றொரு ஓவியம் தெரிந்தது
அதை ஆராய்கையில் அது சோழர்கால ஓவியம் என கண்டறிந்தார். அதாவது சோழர்களின் ஓவியத்திற்கு மேலே ஒரு அடுக்கு பொருத்தி அதன் மேல் நாயக்கர் காலத்தில் ஓவியம் வரையப்பட்டுள்ளது
நாயக்கர் காலத்து ஓவியங்களுக்கு சேதம் ஆகாமல் மற்ற ஓவியங்களை வெளிக்கொண்டு வந்தனர்
1000 ஆண்டுகள் கழித்தும் பிரகாசிக்கும் ஓவியங்களில் திரிபுராந்தகர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு மெய்மறக்க வைக்கும்
இத்தனை ஆண்டுகள் அழியாமல் இருக்கும் வண்ணம், சிறு இடைவெளி மட்டுமே இருக்கும் பாதையில் எப்படி நீளமான ஓவியம் வரையப்பட்டது என்பதும், ஓவியனின் கற்பனை திறமையும் மேலும் பல விடயங்களும் இன்றும் ஆச்சர்யம் அளிக்கின்றன
#கரண_சிற்பங்கள்
நடராஜரின் மேல்கொண்ட பக்தியால் பரதத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுத்தார் இராஜராஜன்
ஆடல்வல்லோனின் சன்னதியில் இடையறாது நாட்டியம் நடக்கவேண்டும் என ஒவ்வொரு ஊரிலும் இறைவனுக்கு சேவை செய்துகொண்டிருந்த 400 நாட்டியப்பெண்கள் மற்றும் தலைக்கோலிகளை தஞ்சையில் குடியமர்த்தினான். இவர்களுக்கு துணையாக 132 இசைக்கலைஞர்களும் இருந்தனர்
இவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இல்லங்கள் வரை அனைத்தையுமே கல்வெட்டில் இன்றும் காணலாம்.
( தலைக்கோல் - வேந்தர்களின் வெண்கொற்ற கொடையை தாங்கி நிற்கும் கம்பம். இது இந்திரனின் மகனான ஜெயந்தனின் அம்சமாகும்
எதிரி மன்னனை வென்றபின் இந்த தலைக்கோலை வெட்டியெடுத்து வைர, வைடூயரிங்களால் அழகுப்படுத்தி பூஜித்து வருவான் மன்னன்
அரங்கேற்றத்தின் போது பூஜித்து உரிய மரியாதையுடன் யானையில் எடுத்து வரப்படும் இந்த தலைக்கோலால் பட்டம் பெறுபவளே தலைக்கோலி ஆவாள்
Ref : சிலப்பதிகாரம் )
ஆடல்வல்லோனான நடராஜரின் மீது கொண்ட பக்தியால் பரதத்தின் 108 கரணங்களை சிற்பங்களாக வடிவமைக்க நினைத்தார் இராஜராஜ சோழன்
எம்பெருமான் ஈசனே பரதம் ஆடுமாறு வடிவமைக்கப்பட்ட இந்த சிற்பங்கள் ஏதோ ஒரு காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன
1956 ஆம் ஆண்டு தொல்லியல் துறையின் திரு பாலகிருஷ்ணன் அவர்களால் கண்டறியப்பட்ட இச்சிற்பதொகுதியில் மொத்தம் 108 கரணங்களில் 81 கரணங்களே பூர்த்தியடைந்துள்ளன. என்ன காரணத்தால் இவை பூர்த்தியடையவில்லை என தெரியவில்லை
#சிலைகள்
அடுத்தபடியாக கல்வெட்டின்படி பார்த்தால் கோவிலுக்கென இராஜராஜ சோழனும் ராணிகள் மற்றும் தளபதிகளும் பற்பல சிலைகளை அளித்துள்ளனர்
இராஜராஜசோழன் 20 சிலைகள் (குறிப்பாக சண்டேசுவரரின் வாழ்க்கையையே சிற்ப தொடராக மட்டுமில்லாமல் சிலை தொகுதியாகவும் குடுத்தார்)
அவரின் அக்காவான குந்தவை 5 சிலைகள் என ராணிகளில் துவங்கி தளபதிகள் வரை மொத்தம் 66 சிலைகள் கோவிலுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல சிலைகள் இன்று இல்லை
இராஜராஜ சோழன் கொடுத்த தட்ஷிணமேருவிடங்கர் மற்றும் குந்தவை தேவி அளித்த உமா பரமேஸ்வரியார் சிலை இரண்டையும் தற்போது காண்கையில் மற்ற சிலைகளின் அருமை புரியும்
சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் அளித்த அர்த்த நாரீஸ்வரர் சிலையில் ஈசனுக்கும், உமா தேவிக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக ஈசனின் பாதி செம்பிலும், உமா தேவியின் பாகம் செம்பின் மேல் பித்தளை பூசியும் செய்த கலைஞனின் திறமை அற்புதமானது
இதில் கோவிலின் நிர்வாக அலுவலராக இருந்த தென்னவன் மூவேந்த வேளாளன் மன்னர் மேல் கொண்ட அன்பால் இராஜராஜ சோழன் மற்றும் உலகமகா தேவி சிலைகளை அளித்தார் மன்னரின் மறைவிற்கு பின் இவ்விரு சிலைகள் வணங்கப்பட்டு வந்தன
60 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான பிரிவு மீட்டெடுத்தது.
( இன்றைய மதிப்பு 150 கோடி)
சென்னைக்கு ரயிலில் வந்த இந்த சிலைகளுக்கு தேவாரம், திருவாசகம் பாடி மலர் தூவி வரவேற்பு நடந்தது
இத்தனை படையெடுப்புகள், அழிவுகளை தாண்டியும் நிற்கும் இவைகளால் அன்றைய காலத்தில் ஓவியம், சிற்பக்கலை மற்றும் உலோக வார்ப்பு எத்தனை முன்னேற்றத்தில் இருந்து இருக்கும் என்பதை தெளிவாக அறிய முடிகிறது
இனி அடுத்தப்பதிவில் கோவிலின் நிர்வாகம் மற்றும் செல்வங்கள் பற்றி பார்க்கலாம்
அடுத்த பதிவு 👇👇
No comments:
Post a Comment