முந்தைய பதிவு 👇👇
நிர்வாகம் மற்றும் செல்வம்
" மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாடு " சோழதேசத்தின் பெருமையை உணர்த்தும் வாக்கியமிது..
சரியான வரிக்காக ஒட்டுமொத்த நாட்டையையும் அளந்து விளைநிலம், தரிசு நிலம் என பிரித்தது
எளிதான நிர்வாகத்திற்காக
நகரம் < நாடு < வளநாடு < மண்டலம் எனப்பிரித்து அதற்கென தனித்தனி அதிகாரிகளை நியமித்தது
இவ்விரண்டும் இராஜராஜசோழரின் ஆட்சியில் நிகழ்ந்த பெரும் விஷயங்களென வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில், திருமழபாடி கோவில் சுவர் சேதமடைந்து விழ, புதிதாக எடுத்த சுவரில் பழைய கல்வெட்டுகளை பதிக்க ராஜராஜன் உத்தரவிட்டதை அக்கோவில் கல்வெட்டுகள் உரைக்கின்றன. எனில் சோழன் கல்வெட்டுகளுக்கு அளித்த முக்கியத்துவத்தினை உணரலாம்
மன்னரின் பெயர்களை மட்டும் தான் கல்வெட்டுகள் தாங்க வேண்டுமா என்ன.. என ஒவ்வொரு சிறு ஊழியன் முதல், ஒரு கிண்ணம் குடுத்தவர் வரை பெரிய கோவிலின் கல்வெட்டில் பதித்து ஒரு படி மேலே போனார்
" நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க.... "
இதுவே தஞ்சை பெரியகோவிலின் முதல் கல்வெட்டு. ஒவ்வொருவர் கொடுத்த நன்கொடைகளில் துவங்கி கோவிலை சுத்தம் செய்யும் பணியாளர்களின் சம்பளம் வரை அனைத்துமே கல்வெட்டுகளாக்கப்பட்டன.
கோவிலின் தலைமை தச்சரான வீரசோழன் குஞ்சரமல்லனில் இருந்து கோவிலில் நாவிதனாக இருந்த இராஜராஜ பெரும்நாவிதன் வரை அனைவரின் பெயரையும் பொறித்தான் ராஜராஜன்
அனைத்துக் கல்வெட்டுக்களையும் தொகுத்து நோக்கும் போது கீழ்க்குறித்த செய்திகளை நாம் அறிய முடிகிறது.
இக்கோயிலின் நிர்வாக அலுவலராக விளங்கியவர் பொய்கை நாட்டு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.
இராஜராஜனின் இராஜகுருவாக விளங்கியவர் ஈசான சிவபண்டிதர்.
இக்கோயிவின் தலைமை அர்ச்சகராகத் திகழ்ந்தவர் பவணபிடரான்.
இக்கோயிவில் கல்வெட்டுக்களை வெட்டிய அலுவலர் பாளூர்கிழவன்.
கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான இராஜராஜ பெருந்தச்சன்.
அவனது உதவியாளர்கள் மதுராந்தகனான நித்தவிநோதப்பெருந் தச்சனும் ( இவர் தான் கங்கை கொண்ட சோழபுரத்தின் தலைமை சிற்பி )
இலத்திச் சடையனான கண்டராதித்தப்பெருந்தச்சனும் ஆவர்.
கோவிலில் வேலை செய்பவர்களுக்கெல்லாம் முடிதிருத்தும் நாவிதனுக்கு கூட தனது பெயரை பட்டமாய் அளித்து இராஜராஜ பெரும்நாவிதன் என கல்வெட்டில் பொறித்தார்
இவர்கள் இல்லாமல்
கருவூலக்காரர்கள் - 4
கணக்கர்கள் - 7
அவர்களின் உதவியாளர்கள் - 9
பிரம்மசாரிகள் - 174 பேர்
ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெய் காவலர்கள் - 141 பேர்
இசை கலைஞர்கள் - 67
கணக்கர்கள் - 4
அவர்களின் உதவியாளர்கள் - 41
மொத்தம் 847 பேர்கள் பற்றியும், அவர்களின் ஊதியம் பற்றியும், அவர்களுக்கு வாரிசு இல்லாதபட்சத்தில் அவர்களின் வேலை யாருக்கு போகவேண்டும் வரை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்வேதங்களாக கருதப்படும் தேவாரம், திருவாசகம் ஒலித்துகொண்டே இருக்க வேண்டுமென அதற்கென 50 பேரை தனியாக நியமித்தான்.
ஏற்கனவே நாட்டியப்பெண்கள் பற்றி கல்வெட்டில் இருந்ததை போன பதிவில் பார்த்தோம்
பொதுவாகவே சோழர்களின் காலத்தில் கோவில்கள் சிறப்புற்று இருந்தன. இராஜராஜனின் சித்தப்பாவும், முந்தைய அரசருமான உத்தம சோழரின் மகன் மதுராந்தக கண்டராதித்தன் கோவில் கணக்குகளை பார்க்கும் பொறுப்பில் இருந்தார்
இவரின் மேற்பார்வையில் ஒரு கோவிலுக்கு நிதிபோதவில்லை என்றால் உடனடியாக பல நிலங்கள் நிவந்தங்களாக அளிக்கப்பட்டன
இவ்வாறு இராஜராஜனின் உயிர்த்துடிப்பான தஞ்சை பெரியகோவிலுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்கள் மிகவும் அதிகம்
கோவிலின் தெளிவான நிர்வாக முறையே தமிழர்களின் உன்னத நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டென்றால் அது மிகையாகாது
சரி கோவிலின் நிர்வாகம் பற்றி பார்த்தோம் அடுத்து கோவிலில் இருந்த செல்வங்கள் என்னென்ன..
மன்னன் இராஜராஜசோழன் மட்டுமே 300 கிலோவிற்கும் அதிகமான தங்கம், பலநூறு கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் எண்ணிலடங்கா செப்பு பொருட்களை தானமாக வழங்கியுள்ளார்
மேலை சாளுக்கிய போர் வெற்றி சோழர்களின் முக்கியமான வெற்றி ஆகும். இதனால் அப்போரின் வெற்றிக்கு பூஜைக்காக தங்கத்தினால் ஆன மலர்களை பரிசளித்தான்
23 வகை முத்துக்கள், 11 வகையான வைரங்கள், 12 வகையான மாணிக்க கற்கள் என கோவிலுக்கு அளவில்லாமல் வழங்கி இருக்கிறார்
மன்னரிலிருந்து ராணிகள், தளபதிகள், வணிகர்கள் என அனைவரும் பல்வேறு சிலைகளிலிருந்து, பூஜைக்கு தேவையான சிறுசிறு பொருட்கள் வரை நன்கொடை அளித்தனர்.
இதையெல்லாம் விட கைலாய யாத்திரை சென்றவர்கள் சூரிய உதயத்தின் போது மேரு மலை தங்கமாய் சில நொடிகள் ஜொலிக்கும் என்று கூறி இருப்பார்கள் போல
இதனால் இராஜராஜன் " தட்சிணமேரு " என்றழைத்த 216 அடி உயர பெரியகோவில் விமானத்தை முழுதாய் பொன் வேய்ந்தான்
( முதலாம் பராந்தகன் தில்லைக்கு பொன் வேய்ந்தான் என பள்ளி பாடப்புத்தகத்திலேயே படித்து இருப்போம்
இராஜேந்திரன் காலத்தில் திருவாருர் கோவில் திருப்பணி செய்யப்பட்டு விமானம், கருவறையின் சுற்று சுவர் மற்றும் வாயில்கள் பொன் வேயப்பட்டன
இராஜாதிராஜன் காலத்தில் திருவீழிமிழலை கோவில் பொன் வேயப்பட்டது
இவையெல்லாம் அக்காலத்தில் சோழர்களின் செல்வ வளத்தை பறைசாட்டுகின்றன)
கோவிலுக்காக எவர் சிறுபொருட்கள் தானமாக அளித்தாலும் அவை சரியான முறையில் அளந்து உடனே கல்வெட்டில் பதிக்கப்பட்டது
இப்படி கல்வெட்டில் சொல்லப்பட்ட செய்திகளையெல்லாம் பார்க்கையில் தஞ்சை பெரியகோவில் இந்திரனின் அமராவதியை போல செல்வத்தில் செழித்ததை அறியலாம்
சரி இனி சாவா - மூவா பேராடுகள் (சாவாத, முதுமை அடையாத பேராடுகள்) திட்டத்தை பற்றி பார்க்கலாம்
சொல்லிலேயே புதிர் உள்ள இது என்ன திட்டம்..?
சரி இதற்கு அக்காலத்தில் சென்று பார்ப்போம்
ஒரு வணிகன் வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு வருகிறான். அவன் பிரார்த்தனை படி கோவிலில் தினமும் அவன் சார்பாக விளக்கு எரிய வேண்டும்
இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த வணிகன் கோவில் நிர்வாகத்தில் செலுத்த, அதற்குரிய ஆடு, மாடுகளை கோவில் நிர்வாகம் ஒரு ஏழைக்கு அளிப்பார்கள்.
அந்த ஏழையை பொறுத்தவரை அவன் தினம் ஒரு ஆழாக்கு நெய்யை மட்டும் கோவிலுக்கு செலுத்த வேண்டும். மேலும் மற்றதை வைத்து அவன் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளலாம்.
குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் எத்தனை மாடுகளை கோவிலில் வாங்கினானோ அதை அப்படியே திருப்பித்தர வேண்டும் (குட்டி போட்டால் ஏழைக்கு லாபம், மாடு இறந்தால் அவனுக்கு நட்டம்)
இதன்படி எண்ணிக்கை குறையாமல், முதுமை அடையாமல் அதே எண்ணிக்கையில் சாவா மூவா பேராடுகள் இருந்தன.
கல்வெட்டின்படி
இதை தொடங்கி வைப்பதற்காக இராஜராஜசோழனே 2832 பசுக்கள், 1644 ஆடுகள், 30 எருமைகளை தானமாகக் கொடுத்தார்
இத்திட்டத்திற்காக கோவிலில் மொத்தம் 4128 பசுக்கள், 6924 ஆடுகள், 30 எருமைகள் இருந்தன
ஒரு விளக்குக்குத் தேவையான நெய்க்கு ஈடாக 96 பெட்டை ஆடுகள் அல்லது 48 பசுக்கள், 16 எருமை மாடுகள் தரப்பட்டன
எடுத்துக்காட்டாக இதன்படி,
தஞ்சாவூர்ப் புறம்படி (தஞ்சைப் புறநகர்) காந்தர்வத் தெருவில் வசிக்கும் இடையன் சூற்றி பாக்கரனிடம் (பாஸ்கரனிடம்) 48 பசுக்கள் தரப்பெற்று ஒரு விளக்குக்கு நெய் கொடுக்க வேண்டுமென்று கூறப்பெற்றது
இதைப்போலவே வணிகர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டு பெரிய கோவில் பிள்ளையார்க்கு அமுது படைக்க தினமும் 150 வாழை பழங்கள் தருமாறு பணிக்கப்பட்டது
சோழனின் ஆட்சியில் ஒரு செல்வந்தனின் வேண்டுதலில் கூட ஒரு ஏழையின் வாழ்வு செழித்தது
சற்றே யோசியுங்கள்
அக்காலத்தில் 1000 பேருக்கு மேல் ஊழியர்களை கொண்ட நிர்வாக கேந்திரமாகவும், செல்வத்தில் அளவில்லாமல் திளைத்து கலை மற்றும் கலாசாரத்தின் சங்கமமாக பிரகதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்திருப்பார்
அடுத்த பதிவு 👇👇
No comments:
Post a Comment