Monday, May 17, 2021

பாகுபாடில்லா பாரதம் - 1

 பாகுபாடில்லா பாரதம் - 1


விநாயகர் காயத்ரி

ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்:

பாகுபாடு என்றொரு வார்த்தையைக் கேட்ட பொழுதினில் நம் எண்ணங்கள் விரிந்து வர்ணத்திற்கு சென்று விடும் .
பிராமணன் தலையில் பிறந்தான் சத்திரியன் தோளில் பிறந்தான் வைஷியன் தொடையில் பிறந்தான் சூத்திரன் பாதத்தில் பிறந்தான்
என்று மனது எங்கெல்லாமோ சென்று இருக்கும் .

நமது இதிகாச புராணத்தை உற்று நோக்கின் படைப்பை பற்றி இரு விஷயங்கள் புலப்படும்.

ஒன்று சிருஷ்டியின் தோற்றம்:

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் ஆகிய நான்கும் சேரந்தது ஒரு சதுர்யுகம்.

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்திரம் 

14 மன்வந்திரங்கள் = ஒரு கல்பம் இதுவே பிரம்மதேவரின் ஒரு பகல் 

2 கல்பங்கள் = பிரம்மதேவரின் ஒரு நாள்

360 நாட்கள் ஒரு வருடம் இதே போல் 100 வருடங்கள் கொண்டது ஒரு பிரம்மனின் ஆயுள் .

இதில் ஒரு மன்வந்திரத்திற்கு ஒரு முறை வரும் பிரளயத்தில் 3 லோகங்கள் மட்டுமும் , கல்ப முடிவில் வரும் பிரளயத்தில் மொத்தமும் அழியும் .

ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் புண்ணிய கணக்குப்படி ஒரு மனு தலைவனாக இருப்பான் . அவ்வாறே சப்தரிஷிகள், இந்திரன், தேவர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மாறுவார்கள்.

இத்தனை பேரின் பெயர்கள், ஏன் செடி கொடிகளில் துவங்கி பாம்புகள் வரை ஒவ்வொருவரும் எப்படி படைக்கப்பட்டனர் என்பது வரை நமது இதிகாச புராணங்களில் தெளிவாக உள்ளது.

இப்பொழுது அடுத்த தகவல் பற்றி வரலாம்.

நான்கு வர்ணங்களும் புருஷன் அல்லது பிரம்மனில் இருந்து நேரடியாக தோன்றிவிட்டன என்பதற்கு முன்பும் எந்த தகவலும் இல்லை அதன் பின்னும் ஒன்றும் இல்லை. இரண்டையும் ஒப்பிட்டால் தானாக தெரியும் எது சரி எது தவறு என்று 

(அது ஒரு சமூகத்தின் கட்டமைப்பும் என்றும், பிராமணனுக்கு அறிவு அதனால் தலையில் தோற்றம், சத்ரியனுக்கு புஜபலம் அதனால் கைகளில் இருந்து தோற்றம் இவ்வாறு ஒவ்வொரு வர்ணமும் உவமை கொண்டு சொல்லப்பட்டது என கூறுபவர்களும் உண்டு)

இதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் , நமக்கு கிடைத்த நூல்கள் அனைத்தும் பல்வேறு பட்ட இடைச்செருகல்களுக்கு பின்பு கிடைத்தது தான். இன்று சட்டத்திருத்தம் செய்து அதை அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்றுவது போல இதிகாச புராணங்களை அடிப்படையாகக் கொண்டு அதைச் சட்டமாக்கி வாழ்ந்த காலத்தில் சில மாற்றங்களை சேர்த்தனர். அவைகளில் ஒன்று தான் வர்ண கோட்பாடு .

குறிப்பிட்ட சிலர் தங்கள் இனம், தங்கள் சந்ததி உயர்ந்து இருக்க சிலரை வஞ்சம் தீர்க்க இடையில் சேர்த்தது தான் இந்த வர்ணப்பாகுபாடு. பின்னால் நடக்கப்போகும் விபரீதங்களை அறியாமல் சுயநலத்தால் அவர்கள் இணைத்த இது பின்னாளில் விஸ்வரூபம் எடுத்தது. அது அடுத்து நம்மை ஆள படையெடுத்த முகலாயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் யானையை அடக்கும் அங்குசமாகியது .
உங்கள் சமய நூல்களின் சட்டத்தை வைத்தே உங்களை ஆள்வோம் என வர்ணாஸ்சிரமத்தை தூக்கி பிடித்தனர்.
அதை வைத்தே நீங்கள் தாழ்ந்தவர்கள் உங்களுக்கு உரிமை வேண்டுமானால் மதம் மாறுங்கள் என பலரை மதமாற்றம் செய்தனர்.

சரி உண்மையில் வர்ணம் என்றால் என்ன?

ஒரு நிறுவனத்திற்கு ,

▫️தலைவர் 
▫️திட்டமிடுபவர்கள் 
▫️மேற்பார்வையாளர்கள் 
▫️தொழிலாளர்கள் 
என அவர்களின் பொறுப்பிற்கேற்றவாறு பெயர்கள் இருப்பது போல அவர்களின் தொழில் சார்ந்த பெயர் தான் இந்த வர்ணம் . ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்ந்து அடிமையாகவே இருக்க வேண்டும் எங்கும் உரைக்கப்படவில்லை என்பதே உண்மை.

வேதம் படித்து அனுஷ்டானங்களை சரியாக கடைப்பிடித்தவன் பிராமணன் ஆனான் .

வீரத்தில் சிறந்து படையில் சேர்ந்தவன் சத்ரியன் ஆனான் .

வணிகம் செய்யும் அளவு சாமர்த்தியம் கொண்டவன் வைஸ்சியன் ஆனான் .

எதிலும் சேராமல் இவர்களின் வேலை செய்பவன் சூத்திரன் ஆனான் .

ஆனால் இது மருவி வர்ணத்தை அடிப்படையாக்கியது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வர்ணத்தின் தர்மங்கள் இன்னதென பெரும் ஞானிகளே கேட்டு அதற்கு உயர்ந்தவர் சொல்வது போல அனைத்திலும் திணித்தனர் .
(உமா தேவி கேட்டு ஈசன் விடையளிப்பது போல கூட உள்ளது).

எனில் இந்து மதத்தில் வர்ணங்களே இல்லையா? என்றால் இருந்தது ஆனால், அது ஒருவரின் குணம் மற்றும் தொழிலின் அடிப்படையில் முடிவு செய்யப்ட்டது.

பல அறிஞர்கள் தெளிவாக கூறியும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் ஆணித்தரமாக அடித்துக் கூறியும் அரசியலுக்காக அனைத்தும் மறுக்கப்பட்டு அதை வைத்தே ஆளவும் நினைக்கின்றனர். அவர்களை பொறுத்தவரை எதுவும் தெரியாது செம்மறியாடுகள் போல யாரோ ஒருவன் சொல்வதை அப்படியே சொல்வார்கள்.

இதிகாச புராணங்கள் ஒன்று விடாமல் ஒவ்வொரு விசயமாக ஆராய்ந்து பார்த்து பாகுபாடு இல்லை என பதிவிட ஆசை.... ஆனால் அட்ஷய பாத்திரம் போல எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கிறது.

ஆதலால் இருப்பதிலேயே பெரியதும், வேதங்களை தொகுத்த வியாசர் சொல்ல விநாயகர் எழுதிய மஹாபாரதத்தை மட்டும் கொண்டு இதை விளக்க முற்படுகிறேன். ஏனெனில் மஹாபாரதத்தில் இல்லாத விஷயங்களே இல்லை ஆகையால் தான் இன்றும் பாரதத்தை ஐந்தாம் வேதம் என்று அழைக்கின்றனர்.

ஒவ்வொரு பாத்திரமும் சில குணங்களை பிரதிபலிக்கின்றன. அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளைக் காட்டி பாடம் நடத்துவதில் மஹாபாரதத்திற்கு ஈடு இணையே இல்லை.

இனிவரும் பதிவுகளில் மஹாபாரதத்தைக் கொண்டு வர்ணாஸ்சிரம் பற்றிய விளக்கம் வரும்.


ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் படிப்பவர் நெஞ்சிலே பசுமரத்தாணி போலே பதியச்செய்ய வல்லது மஹாபாரதம். அது வர்ணாசிரமத்தை பற்றி என்ன கூறுகிறது? வர்ணத்தின் பேரால் வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிய வழிவகுக்கிறதா என்ன? ஒரு ஆகச்சிறந்த படைப்பின் மீது அள்ளி வீசப்பட்ட குற்றங்களை எல்லாம் துடைத்தெறிய வேண்டாமா! வாருங்கள் காண்போம்!



No comments:

Post a Comment