#பாகுபாடில்லா_பாரதம் - 2
வர்ணம் என்பது தொழிலை வைத்தே வருவது பிறப்பால் அல்ல என போன பதிவில் பார்த்தோம்.
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும், எப்படி வாழக்கூடாது என்பதையும் படிப்பவர் நெஞ்சிலே பசுமரத்தாணி போலே பதியச்செய்ய வல்லது மஹாபாரதம். அப்படிப்பட்ட பாரதம் உண்மையில் பிறப்பினால் வரும் வர்ண பாகுபாட்டை ஆதரிக்கிறதா?
ஒரு அரசனுக்கு சேவகனாக இருக்கும் சூத்திரன் வளமாய் இருப்பான். ஆனால் துறவு பூண்டு யாரும் ஆதரிக்காத நிலையிலுள்ள ஒரு பிராமணன் வறுமையில் வாட வேண்டும். இதில் எங்கிருந்து வந்தது பாகுபாடு?
பாரதத்தை எழுதிய கிருஷ்ண துவைபாயனரே ஒரு மீனவ பெண்ணின் மகன் என்பதை அனைவரும் அறிவர்.
அவர் எழுதிய பாரதத்தில் பலதரப்பட்ட இடைசொருகலுக்கு பின்னும் இன்றும் வர்ண பாகுபாடுகளை உடைக்கும் குறிப்புகள் உள்ளன.
காலமும் கற்பனையும் ஒரு சமூக கட்டமைப்பை மாற்ற, அதை வைத்து எப்படி அரசியல் நடத்துகிறார்கள் என காண்போம்.
"ஒருவன் பிராமணன் வீட்டில் பிறந்து இருந்தாலும் வேதங்களை படிக்காத வரை அவன் சூத்திரனனே! தூயவிதிகளுக்கும்,
அறம்சார்ந்த நடத்தைகளுக்கும் எவனொருவன் கட்டுப்படுகிறானோ அவனையே பிராமணனாக அறிவிக்கிறேன்!"
என நகுஷனின் கேள்விக்கு பதிலளிக்கிறார் யுதிஷ்டிரர். (3.179)
ஞானமுள்ளவனே பிராமணன் அவனது பிறப்பு முக்கியமல்ல. ஞானமுள்ளவன் யாராய் இருந்தாலும் ஏன் சூத்திரனாய் இருந்தாலும் அவனிடம் ஞானத்தைப் பெறுவதே தகும். (12.319)
ஒரு நல்ல அரசன்
4 பிராமணர்கள்
8 சத்ரியர்கள்
21 வைஸ்யர்கள்
3 சூத்திரர்கள்
மற்றும் ஒரு ஞானமுள்ள சூதனை அமைச்சர்களாக வைத்திருக்க வேண்டும் என யுதிஷ்டிரனுக்கு அறிவுறுத்துகிறார் பீஷ்மர்.(12.85)
ஒரு பிராமணன் தனது நிலையிலிருந்து தவறி கடமைகளை மறந்தால் அவன் சூத்திரனின் நிலையையும் அடையக்கூடும். இதையே பிருகு பரத்வாஜரிடம் கூறுகையில், "பிரம்மனால் படைக்கப்பட்ட உலகில் அனைவருமே பிராமணர்களாகவே இருந்தனர். ஆசைப்பண்பு, கடுமை மற்றும் கோபம் கொண்ட பிராமணர்களே சத்ரியர்கள் ஆகினர். நற்பண்பு ஆசைப்பண்பு இரண்டும் கொண்டு கடமையில் தவறியவர்கள் வைஸ்சியர்கள் ஆயினர்.
அவ்வாறே ஒழுக்கம் தவறி பேராசை கொண்ட பிராமணன்களே சூத்திரர்கள் ஆயினர்" என்றார். (12.188)
இதையே கிருஷ்ணன் கீதையில் குணங்களின் வேறுபாட்டாலும் கடமையின் வேறுபாட்டாலும் நான்கு வர்ணங்களை படைத்தேன் என உரைக்கிறார்.(4.13)
பைஜவனன் என்ற சூத்திரன் யாகத்தில் லட்சம் பூர்ண பாத்திரங்களை பிராமணர்களுக்கு தானம் அளித்துள்ளான். (12.60)
அவ்வாறே அதிக செல்வம் இருந்தும் அநியாய வட்டி பணம் வசூலித்த சூத்திரனும் இருந்துள்ளான்.(13.117)
பித்ருக்களுக்கு உரிய சடங்குகளை துறவி மூலம் கற்று முறையாக இயற்றி அடுத்த பிறவியில் அரசனாக அவதரித்த சூத்திரனும் உள்ளான்.(13.10)
இராஜசூய யாகத்தில் யுதிஷ்டிரனுக்கு பரிசு கொண்டு காத்திருந்த சூத்திர மன்னர்களும் உண்டு. (2.50)
ஒரு மனிதன் சூத்திர சாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நல்ல குணங்களைக் கொண்டிருந்தானானால், அவன் வைசிய நிலையையும், க்ஷத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். அவனே நேர்மையில் உறுதியாக இருந்தானானால், அவன் பிராமணனாகக் கூட ஆகலாம் என ஞானம் பெறவந்த கௌசிகரிடம் தர்மவியாதன் எனும் வேடன் உரைக்கிறான் . (3.211)
அவ்வளவு ஏன் அதர்மம் தலைவிரித்து ஆடுகையில் நாட்டை காத்து எவன் ஒருவன் தர்மத்தை ஸ்தாபிக்கிறானோ அவன் சூத்திரனாக இருந்தாலும் அரசனாகத் தகுந்தவனே என பீஷ்மரே யுதிஷ்டிரனுக்கு உரைக்கிறார்.(12.78)
க்ஷத்திரியர்கள் என்றழைக்கப்படும் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள், அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள், சண்டாளர்கள் ஆகியோர் அனைவரும் உண்மையில் இருந்த நான்கு வகையினர் ஒருவரோடொருவர் கலந்ததால் எழுந்தவர்களாவர் என ஜனகரிடம் உரைக்கிறார் பராசரர். (12.297)
இவ்வளவு ஏன் தேவர்களில் கூட ஆதித்யர்கள் சத்ரியர்களாகவும்
மருத்துக்கள் வைஸ்யர்களாகவும் கடும் தவங்களில் இருப்பவர்களும் சூரியனின் மைந்தர்களுமான அஸ்வினி தேவர்கள் சூத்திரர்களாகவும் அறியப்படுகின்றனர்.(12.208)
பிறப்பால் வரும் வர்ணத்தை வைத்து ஒதுக்கப்படுவார்களே ஆனால் புராண இதிகாசங்கள் நல் கருத்துக்களை கூறாமல் வெறும் பிராமணர்களை பற்றி மட்டுமே கூறி இருக்க வேண்டும்.
ஒழுக்கம் இழந்து தவறான பாதையில் சென்ற பிராமணன் சூத்திரனாக்கப்பட்டான்.
ஒரு அரசன் விதிவசத்தால் நாடிழந்து வேறுவழியில்லாமல் சிறு வேலைகளை செய்தால் அவன் சூத்திரனே!
அவ்வாறே ஒரு சூத்திரன் வீரத்தால் முன்னேறி தளபதி ஆகி பின் குறிப்பிட்ட பகுதிக்கு அரசனானால் அவன் சத்ரியனே!
அவனே தவதுறவில் சிறந்து வேதங்களை கற்று சுய ஒழுக்கத்தில் சரியாய் இருந்தால் பிராமணன்!
சத்ரியர்களாய் பிறந்து வாழ்வை வெறுத்து துறவியானவர்களும் உண்டு...
பிராமணனாய் பிறந்து வீரத்தால் அரசர்கள் ஆனவர்களும் உண்டு...
அடுத்து வரும் பதிவில் சில இனக்குழுக்களை பற்றியும் ஏகலைவனை பற்றியும் பார்ப்போம்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏
No comments:
Post a Comment