முந்தைய பதிவு 👇👇
முன்னுரை
#கட்டுமானம்
முதல் பதிவில் பெரிய கோவிலின் கட்டுமானம் எப்படி பட்டது என காண்போம்
2000 ஆண்டுகளுக்கு முன் சோழப்பேரரசனான கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையே பலமுறை காவிரியின் வெள்ளத்திற்கு போக்கு காட்டி நிற்கையில் 1000 வருடங்களுக்கு முன் இராஜராஜ சோழன் அமைத்த தஞ்சை பெரிய கோவில் கம்பீரமாய் நிற்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை
முழுக்க முழுக்க இராஜ ராஜ சோழனின் கற்பனையாலும், அவரின் குருவும், சித்தர்களில் ஒருவரான கருவூராரின் அறிவுரையாலும் உருவானதே பெருவுடையார் கோவில்
#அஸ்திவாரம்
இத்தனை காலம் கோவில் கம்பீரமாக நிற்பதற்கு முதன்மை காரணம் அஸ்திவாரம்
சரி கோவிலின் அஸ்திவாரம் எப்படிப்பட்டது...?
2010-ம் ஆண்டு கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவிற்காக கோவில் வளாகத்திலேயே ஆழ்கிணறு தோண்டினர்.
கோவில் அமைந்திருக்கும் பகுதி சுக்கான் பாறை பகுதியாகும். ஆனால் ஆச்சரியமாக அங்கு தோண்ட தோண்ட கிடைத்தது பருமணல் தான், 350 அடிகளுக்கு மேல் தான் களிமண் வந்தது ( பரு + மணல் இது மலைப்பகுதியில் கிடைக்கும், ஆற்று மணலை விட அளவில் பெரிய துகள்களை கொண்டது )
உடனடியாக அப்பணி நிறுத்தப்பட்டது, இன்றும் கோவிலை சுற்றி போர் போட சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
அதாவது கோவிலை அமைக்கும் முன் பெரிய குழி தோண்டி அதில் பருமணலை கொட்டி நிரப்பி இருக்கிறார்கள்.
சாதாரணமாக மணலில் கட்டப்பட்டால் வேறு அதுவே பாத்திரத்தில் மணலை இடும்போது அதன் குணம் மாறும்
நில அதிர்வுகளை அது மேலே அனுப்பாது, மேலும் அது எவ்வளவு பெரிய கட்டுமானம் என்றாலும் இறுக்கி பிடிக்கும்
சரியாக சொன்னால் அரிசி மற்றும் பென்சிலை வைத்து சிறுவயதில் நாம் செய்த உராய்வு சம்மந்தப்பட்ட சோதனை தான்
பென்சில் மற்றும் அரிசி சோதனை
https://www.vikatan.com/news/kids/101668-
இத்தகைய கட்டுமானத்தை தாங்க குறைந்தது ஒரு கோடி கன அடி பரு மணல்கள் கோவிலின் கீழ் கொட்டப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றன
#கிரானைட்
சரி அடுத்து சுற்றுவட்டாரத்தில் மலைகளே இல்லாத தஞ்சையில் எப்படி இத்தனை பாறைகள்
1,50,000 டன் எடை கொண்ட கருங்கற்கள் அதாவது தற்போதைய கணக்குப்படி 50 ஆயிரம் லாரிகளில் கொண்டு வந்து இருக்கவேண்டிய பெரும் கற்பாறைகளை எப்படியோ கொண்டுவந்து பிரம்மாண்டமாக செதுக்கி இருக்கிறார்கள்
கோவிலில் பயன்படுத்திய அனைத்து கற்களுமே அளவில் பிரம்மாண்டமான பெரிய கற்களே குறிப்பாக சொன்னால் கோயிலின் வாயில்களான கேரளாந்தகன் வாயில் மற்றும் இராஜராஜன் வாயிலில் 4 அடி நீளம் , 3 அடி அகலம் கொண்ட 40 அடி உயர ஒரே கல்லில் ஆன தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
(கேரளா + அந்தகன் அதாவது சேரர்களுக்கு எமனை போன்றவன் இது இராஜராஜசோழனின் மற்றொரு பெயர்)
மலைகள் அற்ற காவிரி டெல்டாவான தஞ்சையில் எப்படி இத்தனை கிரானைட் கற்கள் என ஆய்வாளர்கள் யோசிக்கையில் அவர்கள் கூறிய இடம் தஞ்சையிலிருந்து பல மைல் தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றான்டார் கோவில் தான். கிட்டதட்ட தஞ்சையில் உள்ள கல்லையும் சோதித்ததில் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதை கண்டறிந்தனர்
மேலும் தஞ்சைக்கு அருகில் அம்மாப்பேட்டை சாலையில் உள்ள உடையார் கோவில் கல்வெட்டில் " நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து சிலை கொண்டு வந்து " என்ற வரிகள் இதை உறுதிப்படுத்தின.
சரி இத்தனை கற்கள் செதுக்கப்பட்டால், எவ்வளவு கழிவு வந்து இருக்கும் அவை எங்கு சென்றன..?
#குழி_குமிழ்
மேலும் முக்கியமான விஷயம் என்றால் தஞ்சை பெரியகோவிலில் சிமெண்ட மற்றும் சுண்ணாம்பு போன்ற இருகற்களை இணைக்கும் கலவை எதுவும் உபயோகப்படுத்தப்படவில்லை
அனைத்துமே குழி (ம) குமிழ் அமைப்பு அதாவது Interlocking Stones system, கிட்டத்தட்ட Puzzle போன்றது.
ஒரு கல்லை சமன்படுத்தி அதோடு இணையும் சரியான வடிவத்தில் உள்ள கல்லை குழி-குமிழ் முறையில் இணைப்பது, இது தான் கோபுரத்தில் துவங்கி சுற்றுசுவர் வரை கடைபிடிக்கப்பட்ட நுணுக்கம் ஆகும்.
கோவிலின் விமானம் இதுபோன்று கற்களை இம்மி பிசகாமல் அடிக்கி கட்டப்பட்டதே பிறகு இந்த வடிவம் சிதறாமல் இருக்க மேலே ஒரு பெரிய எடையை வைத்தார்கள்
கிட்டதட்ட 10 டன் எடையுள்ள 8 நந்திகள் மற்றும் 80 டன் எடையுள்ள கலசத்தை தாங்கும் உச்சிக்கல்
( இந்தக்கல் ஒரே கல் என சொல்லப்பட்டாலும் உண்மையில் 8 கற்களை கொண்டு ஆரஞ்சு பழம் போல இணைக்கப்பட்டு உருவாக்கியதே
Ref : குடவாயில் பாலசுப்பிரமணியன்)
கோவிலுக்கு சற்றுதூரத்தில் உள்ள சாரப்பள்ளம் எனும் ஊரிலிருந்து சாரம் அமைத்து இக்கல் ஏற்றப்பட்டதாகவும் கூறுவர்
ஆனால் கோவில் சுருள்தள வடிவில் சாரம் அமைத்து கட்டப்பட்டதே. சாரம் கட்ட மணல் தோண்டப்பட்ட இடமாதலால் சாரப்பள்ளம் என மருவி இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து, மேலும் அவ்வூர் 7 கி.மீ தள்ளி இருக்கும் ஊராகும்.
தற்போது பெரிய கோயிலுக்குத் தென்புறம் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுவரை நீண்ட மேடாகக் காட்சியளிப்பது அப்படிச் சுருள் சாய்வுதளம் அமைக்கப்பட்டதற்கான மண் தான் என்பது குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கருத்து.
#தட்சிண_மேரு
சரி மற்றகோவில்களை போல விமானம் சிறிதாக இல்லாமல் 216 அடி பிரம்மாண்ட விமானம் ஏன் அமைக்கப்படவேண்டும்..?
( அக்காலத்தில் வாயில் கோபுரங்கள் பெரிதாக கட்டும் வழக்கமும் இல்லை, பெரிய கோவிலின் வாயில் கோபுரங்கள் தான் மற்றவற்றிற்கு அடிப்படை )
கைலாய யாத்திரை பற்றி நம்மில் பலரும் அறிவோம் ஈசனின் இருப்பிடமான மலையை லிங்கமாகவே பாவித்து அதை வணங்குவதில் முடிகிறது கைலாய யாத்திரை
இன்றும் பல ஸ்தலங்கள் தென்கயிலாயம் என்று போற்றப்பட்டாலும் கைலாயத்தை பிரதிபலிக்கும் எதுவும் இல்லை என இராஜராஜன் நினைத்தார் போலும்
கல்வெட்டின்படி இவ்விமானத்தின் பெயர் " தட்சிணமேரு " அதாவது தென்திசையில் உள்ள மேரு
ஈசன் வாசம் செய்யும் மேரு மலையின் ரூபமாக அமைந்ததே இந்த பிரம்மாண்ட விமானம் இதையே ஈசனின் வடிவமாகவும் வடிவமைத்தார் இராஜராஜ சோழன்
( https://seetharaman007.blogspot.com/.../06/blog-post.html... )
கைலாய மலை சூர்ய உதயத்தின் போது பனியில் ஒளி எதிரொளிப்பால் தங்கமலை போன்று பிரகாசிக்கும் ஆனால் தட்சிணமேரு என்றுமே பிரகாசிக்கவேண்டும் என விமானம் முழுதும் தங்க தகடுகளை பதித்தார்
இராஜராஜசோழன் கயிலாயத்தையே பெரும்முயற்சியால் தஞ்சையில் அமைத்தார் என்றால் அது மிகையாகாது
#திருச்சுற்று_மாளிகை
கோவிலின் சுற்றுப்பாதையை பொறுத்தவரை அதை அமைத்தவர் இராஜராஜனின் சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் ஆவார்
திருச்சுற்று மாளிகை என அழைக்கப்படும் சுற்றுப்பாதையில் மொத்தம் 36 பரிவார ஆலயங்கள் இருக்கின்றன. இவைகளில் அஷ்டதிக் பாலகர்களின் ஆலயங்கள் மட்டும் தற்போது சிதைந்த நிலையிலாவது உள்ளன. இவை தவிர எட்டு பிரகார தெய்வங்களின் ஆலயங்களும் உள்ளன ஆனால் அனைத்துமே படையெடுப்புகளால் சிதைந்துவிட்டன
மேலும் " திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி " என்ற வரி அம்மன் கோவில் வெளியே திருச்சுற்று மாளிகையில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன
ஆலயங்களில் சிலைகளின் கீழ் இருந்த நவமணிகளை கொள்ளையடிக்க இந்த ஆலயங்களில் இருந்த சிலைகள் உடைத்து எடுக்கப்பட்டன.
ஆய்வாளர்களின் கருத்துப்படி திருச்சுற்று மாளிகை இரண்டு அடுக்கு கொண்ட மாடியாக இருந்து பின்னாளில் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும் ஏனென்றால் அதன் மேல் தளத்தில் அதற்கான கூறுகள் இன்றும் உள்ளது
கி.பி 750-ல் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் சோழநாட்டில் நந்திபுரத்து ஆயிரத்தளி எனும் ஆயிரம் லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பெருங்கோவில் ஒன்று எழுப்பினார் ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பில் அவை அழிய அதில் 108 லிங்கங்களை மீட்டு பிரகாரத்தில் 1801 ஆம் இரண்டாம் சரபோஜி மன்னர் பிரதிஷ்டை செய்தார்
#நீர்_மேலாண்மை
ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இரண்டு வடிகால்கள் அமைத்து கட்டப்பட்ட கோவில் பெரிய கோவில்
அபிசேகம் செய்யப்பட்ட நீரும், தூசியாக வரும் நீரும் தெற்கு பக்கம் வழியாக நந்தவனத்திற்கும், மழையினால் வரும் அதிகபடியான நீர் வடக்கு பக்கம் மூலமாக சிவகங்கை குளத்திற்கும் செல்கின்றன
" சோழநாடு சோறுடைத்து " என்பதற்கு முக்கிய காரணம் சோழர்களின் நீர் மேலாண்மையே. சோழர்கள் காலத்தில் வெட்டப்பட்ட வாய்க்கால்கள், ஏரிகள் எண்ணிலடங்காதவை
இந்தியாவின் நீர் பாசன தந்தை என அழைக்கப்படுபவரான சர் ஆர்தர் காட்டன் கரிகாலன் அமைத்த கல்லணையை கண்டு பிரமித்து ஆங்கிலத்தில் " Grand anicut " என பெயரிட்டார்.
கோதாவரி நதியில் தவ்லேஸ்வரம் அணை , தமிழகத்தில் மேலணை மற்றும் கீழணையை கரிகாலனின் நுட்பத்தை பின்பற்றியே அமைத்தார்.
இதனால் செலவுகள் பல குறைந்து மேலணை என்றழைக்கப்படும் முக்கொம்பை 2 லட்ச ரூபாயில் கட்டி முடிக்க முடிந்தது
ஆந்திராவில் மட்டும் 3000 சிலைகள் உள்ள இந்திய நீர் பாசன தந்தையான இவருக்கே கரிகால சோழன் தான் குரு
#நிழல்_காரணம்
கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது என சிலர் சொன்னாலும் காலையிலும், மாலையிலும் நிழல் விழும் இது வதந்தி என கூறுவோறும் உண்டு
உண்மையில் நண்பகல் அதாவது 12 மணிக்கு விமானத்தின் நிழல் கீழே விழாது இதிலென்ன ஆச்சர்யம்
ஒரு கட்டிடம் 0.0 டிகிரி நேராக அதாவது துளி கோணம் கூட சாயாமல் செங்குத்தாக இருந்தால் மட்டுமே அதன் நிழல் உச்சிவேளையில் கீழ் விழாது
ஒரு கட்டுமானம் 0.0° நேராக கட்டுவது உண்மையில் பெரும் சாதனை தான் அதுவும் 1000 வருடங்கள் கழித்தும் தனது காலத்தில் 1679-ல் துவங்கி இன்றுவரை பத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களை சந்தித்தும் துளிகூட மாறாமல் இருக்கும் தஞ்சை பெரிய கோவில் சாதனையின் உச்சம்
#சுரங்க_பாதை
தற்போது சுரங்கத்தில் மெட்ரோ போவது ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால் அன்று இராஜராஜன் குதிரையில் சுரங்கத்தின் வழியை பீரகதீஸ்வரரை தரிசனம் செய்தார்
இன்றும் நூற்றுக்கணக்கான சிக்கல்களை கொண்ட சுரங்கபாதைகள் தஞ்சை பெரியகோவிலில் காணப்படுகின்றன ஆனால் அவை ஆபத்து மிகுந்தவை என்பதால் மூடப்பட்டுள்ளன
பொதுவாகவே அக்காலங்களில் சுரங்கபாதைகள் முக்கிய பங்கு வகித்தன பயணம் எளிது என்பது முதன்மை காரணமாக இருந்தாலும் சுரங்களினால் ஆபத்து காலங்களில் எளிதாக வெளியேற முடியும்
மிகவும் சிக்கலான அமைப்பாக இருப்பதால் பாதை தெரியாதவர்கள் உள்ளே நுழைந்தால் விஷவாயு, விஷஜந்துக்கள் முதல் பல இடர்களில் சிக்கி மரணமடைவார்கள்
ஆபத்து காலங்களில் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும் என்பதால் பெரும்பாலும் இவை அந்தப்புறத்திலிருந்தே துவங்கும்
அவ்வாறே கோட்டை எதிரிகளிடம் சிக்கிவிட்டால் கஜானாவில் உள்ள செல்வங்களை வெளியிலிருந்தே மீட்கலாம் என்பதால் அந்நாட்டின் செல்வங்களும் பெரும்பாலும் இந்த சுரங்கபாதைக்கு அடியிலேயே இருக்கும். சுரங்க பாதைகளின் ரகசியம் அரசன் முதலிய முக்கியமானவர்களுக்கு மட்டுமே தெரியுமென்பதால் இப்படி வைப்பது பாதுகாப்பானது
முக்கிய பாதைகள் ஆறுகள் குளங்களுக்கு அடியிலும் அமைக்கப்பட்டு இருக்கும். எதிரிகள் சுரங்க பாதைகளின் ரகசியம் அறிந்தால் ஒரு பாறையை குறிப்பிட்ட இடத்தில் உருட்டி விடுவதாலேயே அந்த சுரங்கபாதைகளில் நீர் புகுந்து உபயோகமற்றதாகிவிடும்
பொதுவாகவே நமது கோவில்கள் கம்பீரமாக கோட்டை போல் இருப்பதால் ஆங்கிலேயர்கள் முதல்கொண்டு பலர் சிப்பாய்களின் கூடாரமாகவும் பாதுகாப்பு அரண்களாகவும் போர்களில் பயன்படுத்தினர் அப்படி விற்களில் துவங்கி பீரங்கி வரை எதிர்த்தும் இன்னும் அழகு குறையாமல் நிற்கின்றது இராஜராஜேஸ்வரம்
அடுத்த பதிவில் கோவில் கட்ட பயன்படுத்திய அளவுகள் என்ன மேலும் கோவிலில் அமைந்த ஓவியங்கள், கரண சிற்பங்கள் மற்றும் சிலைகளை பற்றி பார்ப்போம்
அடுத்த பதிவு 👇👇
கலைநுட்பம்